வெண்டைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி ??

வெண்டைக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் பொட்டாசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே1, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இத்தகைய வெண்டைக்காயை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். அதற்கு வெண்டைக்காய் பலவாறு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதில் ஒன்று தான் வெண்டைக்காய் சிப்ஸ்.

மாலை வேளையில் ஸ்நாக்ஸ் சாப்பிட தோன்றும் போது, வீட்டில் வெண்டைக்காய் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சுவையில் சிப்ஸ் செய்து சாப்பிடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு வெண்டைக்காய் சிப்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் சிப்ஸின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வெண்டைக்காய் சிப்ஸ் மாலை வேளையில் மட்டுமின்றி, மதிய உணவின் போது சைடு டிஷ்ஷாகவும் சாப்பிட ஏற்றவாறு இருக்கும்.

சரி, வாருங்கள் இப்போது வெண்டைக்காய் சிப்ஸை எப்படி செய்வது என்று காண்போம். அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெண்டைக்காய் – 10

* கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* மாங்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் வெண்டைக்காயை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு துணியால் வெண்டைக்காயை துடைத்து, ஈரப்பசை இல்லாமல் வைத்துக் கொள்ளவும்.

* பின் வெண்டைக்காயின் இரு முனைகளையும் வெட்டி நீக்கிவிட்டு, ஓரளவு நீள நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு துண்டுகளாக்கப்பட்ட வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மாங்காய் தூள், கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைத்து வைத்துள்ள வெண்டைக்காயை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.

* இப்போது மொறுமொறுப்பான வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.

குறிப்பு:

* பொரிப்பதற்கு எண்ணெயை சற்று தாராளமாக வெண்டைக்காய் நன்கு மூழ்கும் அளவு பயன்படுத்த வேண்டும்.

* அதிகமாக நீரை ஊற்றி விட வேண்டாம். லேசாக நீரைத் தெளித்து பிரட்டிக் கொள்ளுங்கள்.

* வேண்டுமானால், இத்துடன் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

* மாங்காய் தூள் இல்லாதவர்கள், எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.