கொரோனா வந்து சரியாயிடுச்சா? அப்ப இனிமே தான் நீங்க கவனமா இருக்கணும்.!!

இதுவரை புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் வந்த நிலையில், தற்போது உலகெங்கிலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும் வைரஸின் வெளிப்பாடு எதிர்கால நோய் எதிர்ப்பு சக்திக்கு உத்திரவாதம் அளிக்காது என்றும் கூறப்படுகின்றன. தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா நோயாளிகள் இரண்டாவது முறையாக வைரஸால் தாக்கப்படும் போது இன்னும் கடுமையான அறிகுறிகளை சந்திக்க நேரிடும் என்று தெரிய வந்துள்ளது.

உலகில் சுமார் 25 பேருக்கு இரண்டாவதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்திய ஊடக அறிக்கைகளின் படி, நெதர்லாந்தைச் சேர்ந்த கொரோனா நோயாளிகளில் ஒருவர் கோவிட்-19 நோயால் இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். டச்சு வம்சாவளியைச் சேர்ந்த 89 வயதான நோயாளி, கொரோனா வைரஸால் இரண்டாவதாக தாக்கப்பட்டு இறந்த முதல் நபராக நம்பப்படுகிறது.

இரண்டாவது தொற்றை சந்தித்த டச்சு பெண்மணி

இந்த பெண்ணுக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் தாக்கிய போது, அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான இருமல் போன்ற அறிகுறிகளை சந்தித்துள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று, 5 நாட்கள் கழித்து அறிகுறிகள் போன பின்னர் பி.சி.ஆரில் இரண்டு முறை பரிசோதித்ததில் நெகட்டிவ் காட்டப்பட்டதால் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கடுமையான அறிகுறிகள்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் வேறுபட்ட வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல், இருமல் மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் போன்றவற்றால் அவஸ்தைப்பட்டதால், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலும்பு மஜ்ஜை புற்றுநோயாளி

இந்த டச்சு நோயாளி எலும்பு மஜ்ஜை புற்றுநோயின் ஒரு அரிய வடிவமான வால்டென்ஸ்ட்ராமின் மேக்ரோகுளோபூலினீமியாவால் அவதிப்பட்டார். இது அவரது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தியது. புற்றுநோய்க்காக ஹீமோதெரபி சிகிச்சை மேற்கொண்ட பிறகு இரண்டு நாட்களுக்குப் பின் அவர் கோவிட்-19-ஆல் மீண்டும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இவர் இரண்டு வாரங்கள் கொரோனாவால் அவஸ்தைப்பட்டு இறந்தார்.

இரண்டாவது தொற்று மிகவும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்

தி லான்செட் தொற்றுநோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அமெரிக்காவில் கொரோனாவால் இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்ட முதல் வழக்கு தெரிய வந்தது. நெவாடாவைச் சேர்ந்த 25 வயதான ஒருவருக்கு கொரோனாவில் இருந்து மீண்ட 48 நாட்களுக்குள் கொரோனா வைரஸின் இரு மாறுபட்ட வகைகளால் பாதிக்கப்பட்டார். ஆய்வறிக்கையின் படி, இரண்டாவதாக தொற்று ஏற்பட்ட போது நோயாளி மிகவும் தீவிரமான அறிகுறிகளை சந்தித்தார். இதன் விளைவாக அவர் ஆக்ஸிஜன் ஆதரவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதோடு இவருக்கு எந்த ஒரு நோயெதிர்ப்பு கோளாறுகளோ அல்லது வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகளோ இல்லை என்றும் அமெரிக்காவின் நெவாடா பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இரண்டாவது தொற்றில் இருந்து மீண்ட இளைஞர்

ஏப்ரல் 2020 இல் SARS-CoV-2 சோதனையில் பாசிட்டிவ் வந்த பின்னர், குணமான பின் மீண்டும் பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் வந்தது. பின்னர் ஜூன் 2020 இல், அந்த நோயாளி இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சோதிக்கும் போது பாசிட்டிவ் வந்தது. இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது அவர் காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல், இருமல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் இந்த நோயாளி இரண்டாவது கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது நோய்த்தொற்றின் தீவிரத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள்

இரண்டாவது நோய்த்தொற்றின் தீவிரத்தில் பல கருதுகோள்கள் உள்ளன. அதில் ஒரு கோட்பாடு என்னவெனில், கோவிட்-19 நோயாளிகள் அதிகளவு கொரோனா வைரஸை சந்தித்திருக்கலாம். இதனால் இரண்டாவது முறையில் தாக்கப்படும் போது மிகவும் கடுமையான எதிர்வினையை உண்டாக்கலாம்.

லான்செட் ஆய்வின் படி, அமெரிக்க நோயாளியும் கொரோனா வைரஸின் மிகவும் மாறுபட்ட ஒரு திரிபுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.

மற்றொரு நம்பத்தகுந்த காரணம், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆன்டிபாடி சார்பு விரிவாக்கத்தின் வழிமுறையாக இருக்கலாம். கொரோனா வைரஸ் உடன் முதல் சந்திப்பின் போது, நோயெதிர்ப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் சில பாதுகாப்பு புரதங்கள், அடுத்தடுத்த தொற்றுநோயை மோசமாக்கும் என்று அவர்கள் விளக்கினர். மேலும் இந்த வழிமுறை 2002-2003 SARS தொற்று வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலுடனும் காணப்பட்டது.

முந்தைய தொற்று இரண்டாவது தொற்றை சமாளிக்க உதவாது

SARS-CoV-2 நோய்த்தொற்றுகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பிரதிபலிப்பு பற்றி இன்னும் முழுமையாக பல விஷயங்கள் அறியப்படாத நிலையில், இத்தகைய கண்டுபிடிப்புகள் முந்தைய நோய்த்தொற்றானது எதிர்கால நோய்த்தொற்றுக்கு எதிராக பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதைக் குறிக்கிறது என்று நெவாடா பல்கலைக்கழகத்தின் ஆய்வின் முதன்மை ஆசிரியர் மார்க் பண்டோரி குறிப்பிட்டார்.

முடிவு

எனவே, அனைவரும் தொற்றுக்களை முன்னரே கண்டுபிடித்திருந்தாலும், இல்லாவிட்டாலும், சமூக வலகல், மாஸ்க் அணிவது மற்றும் SARS-CoV-2 அண்டாமல் இருக்க அடிக்கடி கைகளைக் கழுவுவது உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே நல்லது என்றும் ஆய்வின் முதன்மை ஆசிரியர் மார்க் பண்டோரி கூறுகிறார்.