சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள்.. காலில் விழுந்து கண்ணீர் வடித்த பெண்கள்..!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பரம்பிக்குளம் வனப்பகுதியில் செம்மநாம்பதி ஆதிவாசி கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்திற்கு செல்ல கேரளாவில் இருந்து வாகனங்கள் வர வேண்டும் என்றாலும் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சேத்துமடை வழியாக 80 கிமீ பயணம் செய்து செல்ல வேண்டும்.

ஆனால், செம்மானம் வனப்பகுதியின் வழியாக சாலை வசதியை ஏற்படுத்தி கொடுத்தால், 8 கிமீ தூரத்தில் உள்ள தேக்கடி மற்றும் பரம்பிக்குளம் பகுதிக்கு செல்ல இயலும். இதனை வலியுறுத்தி சாலை அமைத்து தர வேண்டும் என்று பல வருடமாக அக்கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

எந்த விதமான போராட்டத்திலும் பலனில்லாத நிலையில், ஆதிவாசி கிராம தலைவர் ராமன் குட்டி தலைமையில் சாலை அமைக்கும் பணியினை மக்களே கையில் எடுத்துள்ளனர். இதனை அறிந்த கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் மணற்சாலை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே, ஆதிவாசி மக்கள் அங்கு இருந்த அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதனர். இதனையடுத்து பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விஷயம் தொடர்பாக பேசிய அம்மாவட்ட ஆட்சியர் இரண்டு மாதத்தில் மணற்சாலையை 100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக அமைக்கும் பணிகள் துவங்கும் என்று தெரிவித்தனர்.