உயிரிழந்த தாய்க்கு கவச உடையுடன் மகனின் இறுதி அஞ்சலி

தமிழகத்தில் உயிரிழந்த தாயின் உடலை பார்ப்பதற்காக மன்றாடிய கொரோனா நோயாளி பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பாப்பாநேரி பகுதியை சேர்ந்தவர் மின்னல் அம்மா. இவர் உடல் நலிவுற்ற நிலையில், நேற்று உயிரிழந்தார்.

இதற்கிடையில், இவரது மகன் முருகேசன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது தாய் இறந்த தகவலை அறிந்த முருகேசன் கடைசியாக தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கோரி மன்றாடி உள்ளார்.

இதை அறிந்த வருவாய் துறையினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து நேற்றிரவு அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்து சென்றுள்ளனர்.

தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முருகேசன் தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்ததை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.