இந்தியாவின் செயலால் நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்த சீன ராணுவத்தினர்!

எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், இந்திய ராணுவத்தினரின் மனிதாபிமான சைகைக்கு சீன அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

லடாக் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்திய-சீன எல்லையில் பல ஆயிரம் வீரர்கள் மற்றும் கனரக பீரங்கி உள்ளிட்ட ராணுவ தளவாடங்களையும் குவித்து வருகின்றது. சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்திய ராணுவமும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் எல்லையில் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி சீன பகுதியில் இருந்து 13 எருதுகள் மற்றும் 4 கன்று குட்டிகள் இந்தியாவின் அருணாசல பிரதேச எல்லைக்குள் வந்து விட்டது.

இதையடுத்து எல்லை தாண்டி வந்த 13 எருதுகள் மற்றும் 4 கன்று குட்டிகளை சீனாவிடம் ராணுவத்தினிடம் இந்திய ராணுவ வீரர்கள் ஒப்படைத்தனர். இந்திய ராணுவத்தின் மனிதாபிமான செயலுக்கு சீனா அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிழக்கு கமாண்ட் தனது டிவிட்டரில், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று அருணாசல பிரதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, 13 எருதுகள் மற்றும் 4 கன்று குட்டிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 7ம் தேதியன்று இந்திய ராணுவத்தினர் சீனா ராணுவ அதிகாரிகளிடம் எருதுகள் மற்றும் 4 கன்று குட்டிகளை ஒப்படைத்தனர். இந்திய ராணுவத்தின் மனிதாபிமான சைகைக்கு சீன அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர் என பதிவு செய்யப்ட்டுள்ளது.