பகல் நேரத்தில் காணும் கனவு பலிக்காது என்பது உண்மையா?

உண்மையில் கனவுகள் என்பது நம் ஆழ் மனதில் இருந்து வெளியேறும் கற்பனைகள் என்று நம்பப்பட்டு வருகிறது. நாம் ஆழ் மனதிற்குள் எதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்? என்பது நமக்கே கூட தெரியாதாம். அப்படி எந்த நேரத்தில் நாம் காணும் கனவுகள் பலிக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சில கனவுகள் முழித்துக் கொண்டிருக்கும் பொழுது கூட வரும். அவைகள் நம்முடைய மனதில், நாம் ஆழமாக நடக்க வேண்டும் என்கிற ஆசையுடன் நினைக்கும் சில விஷயங்கள் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருப்பதால் முழித்துக் கொண்டிருக்கும் பொழுது கூட அவைகள் கற்பனையில் படங்களாக நம் கண் முன்னே ஓடிக் கொண்டிருக்கும்.

ஒரு விஷயத்தை நீங்கள் தொடர்ந்து நினைக்கும் பொழுது, ஆழமாக நினைக்கும் பொழுது நிச்சயம் அந்த விஷயம் நடைபெறும் என்கிறது உளவியல் ரீதியான அறிவியல்.

இதையே ஆன்மீகமும் சொல்கிறது. எந்த ஒரு விஷயத்தை நீங்கள் தீர்க்கமாக நம்பி கொண்டிருக்கிறீர்களோ, அவை உண்மையில் நடைபெறும் என்று ஆன்மிகம் கூறுகிறது. இந்த விஷயத்தைப் பொருத்தவரை ஆன்மீகமும், அறிவியலும் நமக்கு ஒரே ஒரு பதிலை தான் தருகிறது என்பது ஆச்சரியத்தக்க விஷயம்.

அது போல் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சில கனவுகள் நமக்கு எப்பொழுதாவது வரும். அத்தகைய கனவுகள் எந்த நேரத்தில் நாம் காண்கிறோம் என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சில கனவுகள் நமக்கு மறந்து விடும். அப்படி நமக்கு மறந்து போகும் கனவுகள் பலிக்காது என்கிறது பஞ்சாங்கம். நம் நினைவில் சில கனவுகள் அப்படியே இருக்கும். அது போன்ற கனவுகள் தான் குறிப்பிட்ட காலத்திற்குள் பலிக்கும் என்று குறிப்பிடுகிறது.

அவைகள் எதிர்காலத்தில் நடக்க கூடியவையாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு விஷயத்திற்காக உங்களை எச்சரிக்கை செய்வதாக இருக்கலாம். ஒரு உதாரணத்திற்கு நாம் வீடு கட்டுவதாக கனவில் வந்தால், எதிர்காலத்தில் வீடு கட்டுவோம் அது எத்தனை நாட்களுக்குள் நடக்கும்? எத்தனை வருடத்திற்குள் நடக்கும்? என்பதை நாம் காணும் கனவின் நேரத்தை பொருத்து அமையுமாம்.

மாலை நேரத்தில் 6.00 மணியிலிருந்து 8:24 மணிக்குள் நீங்கள் காணும் கனவு ஒரு வருடத்திற்குள் நடக்குமாம். அது போல் 8.24 மணியிலிருந்து 10.48 மணிக்குள் நீங்கள் காணும் கனவானது 3 மாதத்திற்குள் பலிக்குமாம்.

இரவில் தூங்கும் போது 10.48 மணியிலிருந்து 1.12 மணிக்குள்ளாக நீங்கள் காணும் கனவு 1 மாதத்திற்குள் நடக்குமாம். 1.12 மணியிலிருந்து விடிகாலையில் 3.36 வரை நீங்கள் கனவு கண்டு இருந்தால் 10 நாட்களுக்குள் பலிக்குமாம். 3.36 மணியிலிருந்து 6.00 மணிக்குள் கனவு வந்தால் அது உடனடியாக நடைபெற நிறைய வாய்ப்புகள் உள்ளதாக பஞ்சாங்க சாஸ்திரம் கூறுகிறது.