தல அஜித்துடன் நடித்தது எனக்கு மிக பெரிய கௌரவம்!

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பிங்க்’. இதன் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தமிழில் போனி கபூர் தயாரித்தார். எச்.வினோத் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தை தல அஜித்குமார் ஏற்றார்.

வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இத்திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இன்று ‘நேர்கொண்ட பார்வை’ வெளியாகி ஓராண்டினை நிறைவு செய்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ‘நேர்கொண்ட பார்வை’ படம் ஓராண்டு நிறைவுப் பெற்றதை முன்னிட்டு, மீரா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டா பதிவில் “மீரா வலிமையான மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடிய பெண். எப்போதும் தன் கையில் ஒரு ரப்பர் பேண்டையும் அணிந்திருப்பார், வெப்பம் அதிகமாகும் சமயத்தில் அதைக் கொண்டு தன் தலைமுடியைக் கட்டிக் கொள்வார். அவர் தற்சார்புடையவர். மீராவைப் போல இருங்கள். அவள் தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் ஒரு மெகா ஸ்டார். நாம் பேசத் தயங்கும் விஷயங்களைப் பேசும் ஒரு படத்தின் ஒரு அங்கம். தலயுடன் சேர்ந்து நடித்தது ஒரு கவுரவம்” எனப் பதிவிட்டுள்ளார்.