பிரான்சில் முகக்கவசங்கள் – சிகரெட் கட்டைகள் – பொதுவெளியில் எறிவதற்கு அதிகமாக்கப்படும் தண்டனை!!

முகக்கவசங்கள், சிகரட் அடிக்கட்டைகள் (mégots) போன்றவற்றை பொதுமக்கள் பாதையில் எறிவது, மற்றும் கண்ட இடத்தில் குப்பைப் பைகளை வைப்பது போன்ற குற்றங்களிற்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான சட்ட மூலம் ஒன்று பாராளுமன்றத்தில் ஜுன் நடுப்பகுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்தத் தகவலை பிரான்சின் சுற்றுப்புறச்சூழல் மாற்றத்திற்கான அமைச்சிற்கான அரசாங்கச் செயலாளரான ப்ரூன் பொரிசோ (Brune Poirson) தெரிவித்துள்ளார்.

இப்படியான குற்றங்களிற்கு இதுவரை இருந்த அபராதப் பணமான 68€ வினை ஜுன் நடுப்பகுதியிலிருந்து 135€ ஆக அதிகரிக்கும் சட்டமூலமே நிறைவேற்றப்பட உள்ளது.

மக்கள் நடைபாதை, கடற்கரை, கடலிற்குள் என எங்கும் ஒரு முறை பாவித்து விட்டு எறியும் முகக்கவசங்களை மக்கள் பொறுப்பற்ற முறையில் எறிகின்றனர். இவற்றைத் தடுப்பதற்காகவே இந்தச் சட்ட மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது.