கொரோனாவுக்கெதிராக போராடுபவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியின்போது விழுந்து நொறுங்கிய விமானம்!

கனடாவில் கொரோனாவுக்கெதிராக முன்னணியில் நின்று போராடுபவர்களை கவுரவிப்பதற்காக நடத்தப்பட்ட விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின்போது எதிர்பாராதவிதமாக ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops விமான நிலையத்திலிருந்து கனேடிய விமானப்படை விமானங்கள் இரண்டு புறப்பட்ட நிலையில், அவற்றில் ஒன்று வீடு ஒன்றின்மீது விழுந்து நொறுங்கியது.

இதில் அந்த வீடு தீப்பிடித்தாலும், அந்த வீட்டிலிருந்த இருவரும் காயங்களின்றி தப்பினர்.

ஆனால், விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரான Capt. Jennifer Casey என்ற வீராங்கனை விபத்தில் கொல்லப்பட்டார்.


விமானத்தின் விமானி விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து தப்பிவிட்டார். வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் விமானம் விழுவதையும், விமானி வெளியேற்றப்படுவதையும் காணமுடிகிறது.

கொரோனாவுக்கெதிராக போராடுபவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்டுள்ள இந்த அசம்பாவிதம் கனடாவில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.