சூப்பர் ஸ்டார் ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

‘நடிகையர் திலகம்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய அவர், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீம ராஜா, சண்டகோழி 2 என பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அவர் கடைசியாக விஜய்யின் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதையடுத்து மிஸ் இந்தியா, பென்குயின், மேலும் மலையாளத்தில் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் ஆகிய படங்களில் வெளியீட்டுக்காக காத்திருக்கும் அவர், தற்போது தெலுங்கில் குட் லக் சகி, ரங் தே மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 168 வது திரைப்படமான ‘அண்ணாத்த’வில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டாருடன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அவர் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளாராம். அப்படத்தை ‘கீதா கோவிந்தம்’ பட இயக்குநர் பரசுராம் இயக்குகிறார் எனக் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.