தலையில் பேன் அதிகமாக இருக்கா? அதை எவ்வாறு போக்கலாம் தெரியுமா ?

பேன் தலையில் உருவாகும் ஒரு சிறிய பூச்சி, இதன் முட்டை பார்ப்பதற்கு பொடுகு மாதிரியே இருக்கும்.

பேன் இருப்பவரின் தலையணையை பயன்படுத்தினாலோ, அல்லது அவர்களின் தலை துடைக்கும் டவலை பயன்படுத்தினாலோ பேன் பிடித்துவிடும்.

பேன் ஒரு ஒட்டுண்ணி என்பதால், ஒருமுறை பேன் வந்துவிட்டால், அதனைப் போக்குவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.

பேன் தொல்லையால் முடிகூட உதிர ஆரம்பித்து விடும், இது பெரிய மருத்துவப் பிரச்சினையல்ல. தலையில் பேன் இருப்பதால் அவர் சுத்தமற்றவர் என்று அர்த்தமில்லை.

பேன் தலையில் இருந்தால் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பை சொறிந்தால் சிறிதாகச் சிவந்த நிறத்தில் உருண்டு காணப்படுகிற கட்டிகள் வந்துவிடும். சில நேரத்தில் பேன் தொல்லையால் சொறிந்தால் தலையில் நகத்தினால் காயம் கூட ஏற்பட்டு விடும்.

பேன் தொல்லை இருப்பவரின் முடியின் வேரில் வெள்ளை நிறத்தில் உருண்டு காணப்படும். நல்ல வெளிச்சத்தில் இதைப் பார்க்கலாம்.

  • நாட்டு மருந்து கடையில் நரஸிங்க தைலம் என்று உள்ளது. இதைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.
  • சீத்தாப்பழ விதைகளைக் காயவைத்துப் பொடி செய்து சிறிதளவு எடுத்துச் சீயக்காயில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வர பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
  • வசம்பைத் தண்ணீர்விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவைத்து தலையை அலசினால் இப்பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
  • துளசி இலையை நன்றாக மையாக அரைத்து, தலையில் தடவிச் சிறிது நேரம் ஊறவைத்து சூடுதண்ணீரில் குளித்தால் பேன் ஒழிந்து விடும்.
  • உப்பு கலக்காத 50 கிராம் வேப்பம்பூவை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் பேனிலிருந்து விடுபடலாம்.
  • வால் மிளகை ஊறவைத்துப் பால் விட்டு அரைத்துத் தலையில் ஊறவைத்து குளித்தால் பேன் செத்துபோகும்.
  • வேப்பிலைத் தூள், கடுக்காய்த்தூள், வெந்தயத்தூள், பயத்தமாவு, எலுமிச்சைச்சாறு இவற்றையெல்லாம் ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் அளவு போட்டு அதில் கொஞ்சம் வெந்நீரைக் கலந்து தலையில் ஊற வைத்து தலையை அலசினால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.