நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!

பிரித்தானியா தலைநகர் லண்டனிலிருந்து துருக்கி பயணித்த விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செல்ம்ஸ்ஃபோர்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனிலிருந்து துருக்கி பயணித்த ஜெட் ஸ்டார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

விமானம் புறப்பட்ட நிலையில் மதுபோதையில் பயணித்த பிரித்தானியாவைச் சேர்ந்த 26 வயதான சோலி ஹைன்ஸ் என்ற பெண், பைலட் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.

பின்னர், பயணிகளை நோக்கி ‘நான் உங்கள் அனைவரையும் கொல்ல போகிறேன்’ என மிரட்டல் விடுத்து நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார். எனினும், விமானக்குழுவினர் அவரை தடுத்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

பின்னர், விமானத்தின் அவசர வழி கதவை திறக்க முயன்றுள்ளார். தடுக்க சென்ற குழுவினரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

விமானத்தை கடத்த சதிதிட்டம் இருப்பதாக சந்தேகமடைந்த விமானி, உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, உடனே ஜெட் ஸ்டார் விமானத்தை கண்காணிக்க இரண்டு போர் விமானங்கள் விரைந்துள்ளது.

இதனையடுத்து, விமானத்தை திருப்பிய பைலட் மீண்டும் லண்டன் விமானநிலையத்திலே தரையிறக்கியுள்ளார். ரகளையில் ஈடுபட்ட ஹைன்ஸை பொலிசார் கைது செய்தனர்.

பத்திரமாக வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் மறுநாள் மற்றொரு விமானம் மூலம் துருக்கிக்கு பயணித்துள்ளனர்.


சோலி ஹைன்ஸ் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார், செல்ம்ஸ்ஃபோர்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர். நீதிமன்ற விசாரணையின் போது செய்த குற்றத்தை ஹைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், விமானத்தில் பயணிகளின் உயிருக்கு அச்சுற்றுதல் ஏற்படும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட ஹைன்ஸிக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.