ஆண்களை அதிகமாக குறிவைக்கும் கொரோனா வைரஸ்?

இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இரையானவர்களை ஆய்வு செய்ததில் பெண்களை விடவும் ஆண்களே அதிக அளவு பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பு ஆய்விலும் ஒரே முடிவு வெளியாகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 1,115 பேர் இறக்க காரணமாக அமைந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 45,171 என வெளியாகியுள்ள நிலையில்,

இதில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளவர்கள் 8,216 என தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே வுஹான் பல்கலைக்கழகம் சார்பில் புதிய ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இரையானவர்களில் 54 சதவிகிதம் பேர் ஆண்கள் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டுமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளில் 68 சதவிகிதம் பேர் ஆண்கள் என்ற தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஆண்களை அதிகமாக குறிவைப்பதன் காரணம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் பெண்களை அதிகம் பாதிக்காமல் இருப்பது பெண் ஹார்மோன்களின் தொற்று எதிர்ப்புத் திறன்கள் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 138 நோயாளிகளில் 54 சதவிகிதம் ஆண்கள் என வுஹான் மருத்துவமனை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் 4 சதவிகிதம் பேர் மரணமடைந்துள்ளனர்.

மட்டுமின்றி, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களையே கொரோனா வைரஸ் தாக்குவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.