பாகிஸ்தானில் ஏழு பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ள இலங்கை வீரர்கள்!

இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். பாகிஸ்தான், லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23-01-2020 தொடக்கம் 26-01-2020ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியிலேயே வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதன்போது ஏழு குத்துச்சண்டை வீரர்களும் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.  வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான, வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ்.சஞ்சயன் (18) தங்கப்பதக்கத்தையும், பி.ராகுல் (17) தங்கப்பதக்கத்தையும், ரி.நாகராஜா (18) வெள்ளிப்பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (11) தங்கப்பதக்கத்தையும், வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ.நிரோஜன் (16) தங்கப்பதக்கத்தையும், வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் (17) என்ற மாணவன் வெள்ளி பதக்கத்தையும், வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எஸ். சிறிதர்சன் (18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிவிப்பாளரும், பிரான்ஸ் சவாட் குத்துச்சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவைச் சேர்ந்த ஏழு வீரர்களும், தென்னிலங்கையைச் சேர்ந்த பதினான்கு வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர்.

இவ்வீரர்கள் இலங்கைக்கு 11 தங்கப் பதக்கங்களையும், 08 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதன்போது வெற்றி வாகை சூடிய வீரர்கள் நாளை 27-01-2020 மாலை 04.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.