மாவோயிஸ்டுகளை பிடிக்க சென்ற இராணுவ வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

இந்தியாவில் மாவோயிஸ்டுகளை தேடிச் சென்ற இடத்தில் கர்பிணி பெண் ஒருவர் வலியால் துடிப்பதைக் கண்ட இராணுவ வீரர்கள் உடனடியாக அவரை காட்டு வழியாக தங்களுடைய தோளில் சுமந்து சென்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி, பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சத்தீஷ்கரில் குறிப்பிட்ட இடங்களில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக கூறி, சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிஜாப்பூர்-கங்களூர் சாலையில் துணை ராணுவப் படையின் 85 வது பட்டாலியன் பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்தீஷ்கர் நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நயா ராய்ப்பூரில் உள்ள சி.ஆர்.பி.எப் துறை தலைமையகத்திலிருந்து 85-வது பட்டாலியன் குழுவினர் தேடுதல் வேட்டைக்காக பதேடா கிராமத்திற்கு சென்றனர்.

அவர்கள் சென்ற நேரந்த அந்த வழியே ஓடிவந்த ஒரு பள்ளி மாணவர் ஒரு பழங்குடி பெண் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருப்பது குறித்து படையினரிடம் தெரிவித்தார்,

இதனால் படைத்தளபதி தனது முதலுதவி குழுவுடன் மாணவனைப் பின்தொடர்ந்து தொலைதூர கிராமத்தின் காயதப்பரா பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு குறித்த பெண் பிரசவ வலியால் துடிப்பதும் அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதையும் அறிந்த சி.ஆர்.பி.எப் படையின் கமாண்டர் தனது குழுவினரை வேகமாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அந்த அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளால் சூழப்பட்ட கிராமத்தை ஆம்புலன்ஸ் அடைய முடியாததால், ஒரு நீண்ட மூங்கில் கட்டிலைக் கட்டி பாதுகாப்புப் பணியாளர்கள் ஒரு தற்காலிக ஸ்ட்ரெச்சரை விரைவாக உருவாக்கினர்.

அதன் பின் அந்தப் பெண்ணை மூங்கில் கட்டிலில் வைத்து தோள்களில் சுமந்துகொண்டு, அருகிலுள்ள மோட்டார் வாகனங்கள் செல்லும் சாலையை அடைவதற்கு முன்பாக 6 கி.மீற்றர் தூரத்திற்கு மாவோயிஸ்டுகள் இருப்பைக் கொண்ட காடுகளின் வழியாக நடந்து சென்றனர்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டதால், அந்தப் பெண் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சி.ஆர்.பி.எப் வீரர்கள், இப்படி கர்ப்பிணி பெண்ணை தோளில் தூக்கி செல்லும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.