உடலுறவு மூலம் பரவும் இந்த கொடிய புற்றுநோய் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உடலுறவின் மூலம் குறிப்பிட்ட தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் உடலுறவு கொள்வதன் மூலம் குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள் பரவுவதாக கூறப்படுகிறது.

உடலுறவு கொள்வதன் மூலம் பரவக்கூடிய ஒரு வைரஸ் தான் மனிதபாப்பிலோமா வைரஸ் (HPV). இந்த வைரஸ் தான் உடலுறவின் மூலம் தொற்றுக்கள் மற்றும் குறிப்பிட்ட வகை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இக்கட்டுரையில் பல நபருடன் உடலுறவில் ஈடுபட்டால் வரக்கூடிய புற்றுநோயின் வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
மனித பாப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை உண்டாக்கும் கடுமையான அசாதாரணங்களை கர்ப்பப்பையில் உண்டாக்கும். இந்த வகையான புற்றுநோய் எந்த விதமான ஆரம்ப கால அறிகுறிகளையும் வெளிக்காட்டாது. இதை குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனையின் மூலமே கண்டறிய முடியும். மேலும், மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்ற பிறகும் ஒரு பெண்ணிற்கு இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கர்ப்பப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம்.

ஆசனவாய் புற்றுநோய்
குறிப்பிட்ட வகை ஆசனவாய் புற்றுநோய்க்கும் மனித பாப்பிலோமா வைரஸிற்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. மனித பாப்பிலோமா வைரஸ் உடலுறவின் மூலம் பரவக்கூடியது. ஆசன வாயில் வலி, மலம் கழிக்கும் போது சிரமம் மற்றும் இரத்தக்கசிவு போன்றவை ஆசன வாய் புற்றுநோயின் அறிகுறிகளாகும். புற்றுநோயின் நிலைகளைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கதிரியக்கம் மற்றும் ஹீமோதெரபி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

யோனி புற்றுநோய்
பெண் இனப்பெருக்க உறுப்புக்களில் வீரியம் மிக்க செல்கள் அல்லது புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உருவாகும் போது, அது யோனி புற்றுநோயை உண்டாக்குகிறது. இதன் முதல் அறிகுறியே இரத்தக்கசிவு தான். மனித பாப்பிலோமா வைரஸ் தான் இந்த வகை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆண்குறி புற்றுநோய்
உடலுறவின் மூலம் பரவும் மனித பாப்பிலோமா வைரஸ் ஆண்களுக்கு ஆண்குறி புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. இந்த வகை புற்றுநோயின் சில அறிகுறிகளாவன சிவந்திருத்தல், புண், கட்டிகள் மற்றும் இரத்தக்கசிவு போன்றவை.

வாய் புற்றுநோய்
சில வகை வாய் புற்றுநோய் உடலுறவின் மூலம் பரவக்கூடியவையாகும். வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்றுநோய் இருந்தால் உணவை விழுங்கும் போது வலியை உண்டாக்கும். மேலும், நாள்பட்ட வாய் புண், திடீர் உடல் எடை இழத்தல், தொண்டை புண் போன்றவற்றை ஒருவர் சந்தித்தால், உடலில் ஏதோ பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் பரிசோதித்து உறுதி செய்யப்பட்டால், புற்றுநோயின் நிலையைப் பொறுத்து கதிரியக்கம், அறுவை சிகிச்சை அல்லது ஹீமோதெரபி போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது.

தடுப்பு முறை
உடலுறவினால் புற்றுநோய் வராமல் இருப்பதற்கான சிறந்த வழி என்றால், அது மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி போடுவது தான். இந்த வகை தடுப்பூசி அனைத்து வகையான புற்றுநோய்களையும் தடுக்காவிட்டாலும், வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் ஆசன வாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.