ஆட்சிபீடம் ஏறியவுடன் பௌத்தமதம் மற்றும் பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை!வாக்குறுதி அளித்தார் சஜித்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு ஆட்சிபீடம் ஏறியவுடன், அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளது போல் பௌத்த மதத்தையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அமைச்சர் சஜித் பீறேமதாச உறுதியளித்துள்ளார்.

சிங்கள பௌத்த தலைமைப் பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உள்ளிட்ட தலைமை பௌத்த பிக்குகள் முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதாக நம்பிக்கை வெளியிட்டுவரும் சஜித் பிறேமதாச இந்த வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார்.

பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துபீட மகா விகாரைக்கு இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான கலாசார அலுவல்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சரும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பவருமான சஜித் பிரேமதாஸ விஜயம் செய்துள்ளார்.

மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது பாரியார் அதன் பின்னர் துணை மகாநாயக்கரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அஸ்கிரிய மகா விகாரைக்கு கலாசார அலுவல்கள் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ செய்த உதவிகளுக்காக நன்றி செலுத்தும் வகையில் விசேட மத அனுட்டானமொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தலைமையிலான தலைமை பௌத்த பிக்குகள் ஆசீர்வாதங்களையும், ஆலோசனைகளையும் அமைச்சர் சஜித் பிறேமதாசவிற்கு வழங்கினர்.

குறிப்பாக பௌத்த தர்மம் மற்றும் பௌத்த சாசனத்தை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அமைச்சரின் கவனத்திற்கு அஸ்கிரிய மகாநாயக்கர் உள்ளிட்ட அஸ்கிரிய பீட தலைமை பௌத்த பிக்குகள் கொண்டுவந்தனர்.

இந்த அனைத்து ஆலோசனைகளையும் செவிமடுத்த அமைச்சர் சஜித் பிறேமதாஸ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறியதும், பௌத்த தர்மத்தையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாப்பதன் ஊடாகவே முன்நகர்ந்து செல்வோம் என்று அஸ்கிரிய பீட மகாநாயக்கர் உள்ளிட்ட தலைமை பௌத்த பிக்குகளின் முன்னிலையில் வாக்குறுதி அளித்தார்.

“நாட்டின் அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடையங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நாட்டின் ஆட்சியாளர்களின் பிரதான கடமையாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். ஒரு காகிதத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பௌத்த மதத்தையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்கான சரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது. கலாசார அலுவல்கள் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னரே நாட்டில் வளப்பற்றாக்குறையுடன் இருக்கும் பௌத்த விகாரைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வந்துள்ளேன்.

அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் பல வருடங்களாக மேற்கொள்ளாது கிடப்பில் போடப்பட்டிருந்த பல பணிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். இதற்கமைய அண்மைய ஆட்சியாளர்கள் எவரும் கைவைக்காத பௌத்த மத கல்வியை போதிக்கும் அறநெறி பாடசாலைகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்”.

இந்த நிகழ்வின் பின்னர் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கும் அமைச்சர் சஜித் பிறேமதாச பதிலளித்தார்.

இதன்போது தனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு சவால்மிக்க பொறுப்புக்களையும் கண்டு பயந்து ஓடவில்லை என்று தெரிவித்த அமைச்சர், பேச்சுவார்த்தையின் ஊடாக ஜனநாயக முறையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் தீர்மானிக்கப்படுவார் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.

‘பொறுப்பு கிடைக்குமா இல்லையா என்பதை எனக்கும் ஊடகவியலாளர்களுக்கும் முடிவுசெய்ய இயலாது. அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும். மக்கள் பொறுப்பினை வழங்கிய பின்னரே அதுகுறித்து தெளிவாக பேசமுடியும். எனக்கு வழங்கப்படும் சவால்களை நான் தூக்கி எறிந்ததில்லை. நான் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டிருக்கின்றேன். ஆனாலும் நிகழ்கால சவாலாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரைத் தெரிவுசெய்வது இருக்கின்றது. நாட்டு மக்களினதும், நாட்டினதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரைத் தெரிவுசெய்கின்ற சவால்தான் தற்போது இருக்கின்றது. இன்று போய் நாளை வா என்கிற தோஷம் இருப்பதாக சிலர் விமர்சனம் முன்வைக்கலாம். பலவந்தம் இடம்பெறாது என்றும் சிலரால் கூறலாம். ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை, சகோதரத்துவம், ஐக்கியத்துடன் பிரச்சினையை தீர்ப்பதே சிறந்த கிரமமாகும். இதுதான் உலகம் ஏற்றுக்கொள்ளும் முறைமை. நூதன முறைமையாகும். அந்த முறைமை இருக்கும்போது கட்டளைப் பிரயோகங்கள் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனியான சிந்தனையை வெற்றிபெற வைப்பற்கு முயற்சிக்கக்கூடாது.

வேட்பாளர் குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை முடியும்வரை அவர்தான் வேட்பாளர் இவர்தான் வேட்பாளர் என்று கூறமுடியாது. பலருக்கும் பலவித கேள்விகள் இருக்கின்றன. ஆனாலும் நாட்டு மக்களின் கேள்விக்குத் தலைசாய்க்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுகின்றேன்”

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தியிருந்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பலதரப்பட்ட பிரிவினரது ஆதரவைப் பெற்றுவந்தால்தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதாக நிபந்தனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது அமைச்சர் சஜித்திற்கு முன்வைத்திருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரின் இந்த நிபந்தனை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் எந்தவித பேச்சுவார்த்தையையும் நடத்த அவசியமில்லை என்று கூறினார்.