காதலியுடன் ஓட திட்டமிட்ட கணவன், தடுக்க மனைவி செய்த துணிகர செயல்!

தனது கணவன் அவரது காதலியுடன் ஓட்டம் பிடிப்பதைத் தடுப்பதற்காக,விமான நிலையத்தில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பிய ஒரு பெண்ணுக்கு, 88,495 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பிரான்ஸ் குடிமகள் ஒருவர், ஜெனீவா விமான நிலையத்தின் பிரெஞ்சு பிரிவில், ஒருவர் வெடி குண்டு ஒன்றை வைத்திருப்பதாக தகவலளித்தார்.

உடனடியாக விரைந்து செயலில் இறங்கிய விமான நிலைய பாதுகாவலர்களும், ஜெனீவா பொலிசாரும் விமான நிலையத்திற்குள் நுழைந்த அனைத்து பயணிகளையும் நிறுத்தி அவர்களது உடைமைகளை சோதனையிட்டனர்.

அதே நேரத்தில் அந்த தொலைபேசி அழைப்பை டிரேஸ் செய்த பிரான்ஸ் பொலிசார் Haute Savoie பகுதியிலிருந்த ஒரு வீட்டிலிருந்து அந்த அழைப்பு வந்ததைக் கண்டுபிடித்து, அந்த வீட்டுக்கு சென்றனர்.

அங்கு சென்றபோது, அந்த வீட்டிலிருந்த ஒரு பெண், தான்தான் அந்த பொய்யான தொலைபேசி அழைப்பை விடுத்தவர் என ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவர் தனது கணவர் அவரது காதலியுடன் துருக்கிக்கு ஓட்டம் பிடிக்க இருப்பதை தடுப்பதற்காக அவ்வாறு செய்தது தெரியவந்தது.

இதனால் பொலிசாருக்கும் விமான நிலைய பாதுகாவலர்களுக்கும் ஏற்பட்ட செலவை ஈடு செய்ய அவர் 88,495 சுவிஸ் ஃப்ராங்குகள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதை எதிர்த்து ஜெனீவா நிர்வாக நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்ய, நீதிமன்றம் அவரது மேல் முறையீட்டை நிராகரித்தது.

மீண்டும் அவர் சுவிஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய, கடந்த வெள்ளிக்கிழமை அவரது மேல் முறையீட்டு வழக்கை சுவிட்சர்லாந்தின் உச்ச நீதிமன்றமும் நிராகரித்துள்ளதால், அந்த பெண், கட்டாயம் அபராதம் செலுத்தியே தீர வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.