மனைவியைக் கொன்று ப்ரீஸரில் மறைத்து வைத்த கணவன்!

மனைவியைக் கொன்று 100 நாட்களுக்கு மேலாக உடலை ப்ரீஸரில் மறைத்து வைத்த சீனத்து இளைஞருக்கு ஷாங்காய் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஷாங்காயின் ஹாங்காவ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜு சியாடோங் (30). இவரது மனைவி யாங் லிப்பிங் (30) என்பவரே கொலை செய்யப்பட்டவர்.

கடந்த 2016 அக்டோபர் மாதம் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் யாங்கின் கழுத்தை நெரித்துக் கொன்று தமது குடியிருப்பில் மறைத்துவைத்துள்ளார் ஜு.

மட்டுமின்றி மனைவியின் உடலைப் பாதுகாக்க ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ப்ரீஸர் ஒன்றை இணையம் வாயிலாக வாங்கியுள்ளார்.

திடீரென ப்ரீஸர் வாங்கியது தொடர்பில் கேட்டவர்களிடம் தனது செல்லப் பாம்புகள், பல்லிகள் மற்றும் தவளைகளுக்கு இறைச்சி சேமிப்பதற்காக தான் அதை வாங்கியதாக அவர் கூறினார்.

தனது மனைவியைக் கொன்று அவரது உடலை பால்கனியில் யாரும் பார்க்காதவாறு ஒரு ப்ரீஸரில் போட்டு கிட்டத்தட்ட 106 நாட்களாக மறைத்து வைத்துள்ளார் ஜு.

மட்டுமின்றி, தன்னுடைய மனைவி இறந்தது யாருக்கும் தெரியாமல் இருக்க அவர் தனது மனைவியின் சமூக வலைதள பக்கங்களில் உள்நுழைந்து யாங்கின் பெற்றோர் மற்றும் நண்பர்களின் குறுஞ்செய்திகளுக்கு பதிலளித்து வந்துள்ளார்.

மேலும், மனைவி யாங் இறந்த பிறகு, சீனாவின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி தென்கொரியாவுக்கும் பயணம் செய்து திரும்பியுள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், தன் மனைவியை தான் கொலை செய்த சம்பவத்தை மறக்கவே பயணங்களில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தனது மனைவின் கடன் அட்டைகளைக் கொண்டு ஆடம்பர பொருட்கள் வாங்குதல் மற்றும் அன்றாட செலவுகளை செய்து வந்துள்ளார்.

மேலும், தனது மனைவியின் அடையாள அட்டையைக் கொண்டே மற்றொரு பெண்ணுடன் ஹொட்டல் அறைகளுக்குச் செல்லவும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது மனைவி யாங் லிப்பிங்கின் கிரெடிட் கார்டில் இருந்து கிட்டத்தட்ட 150,000 யுவான் பணத்தை எடுத்து மற்றொரு பெண்ணுடன் பயணம் செய்வதன் மூலம் கொலையை மறக்க முயன்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து மாலை மாமியாரின் பிறந்தநாள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜுவின் மனைவி உயிரோடு இருப்பதாக நினைத்து தம்பதிகள் இருவரையும் விருந்தில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில், செய்வதறியாது திகைத்த ஜு, அவரால் இனியும் உண்மையை மறைக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளார். இதன் பிறகு, தனது பெற்றோருடன் பொலிசார் முன்பு ஜு சரணடைந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ஷாங்காய் எண் 2 இடைநிலை மக்கள் நீதிமன்றத்தால் ஜுவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்த மரண தண்டனைக்கு எதிராக ஜு மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட பிறகு மீண்டும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இருப்பினும் ஷாங்காய் உயர் மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜுவுக்கு விதித்த மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.