சோகத்தோடு வெளியேறினாலும் சாதித்துவிட்டு வெளியேறிய ரோஹித்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரில் பின்னடைவை சந்தித்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜாவின் சதம், ஹண்ட்ஸ்காம், பின்ச், ரிச்சர்ட்சன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 272 ரன்களை ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் குவித்தது. தொடரை வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணி 273 ரன்கள் எடுக்க வேண்டும்.

அதன்படி, இந்திய அணி இன்னிங்க்ஸை தவான், ரோஹித் தடுமாற்றத்துடன் தொடங்கினார்கள். டெல்லி வீரர்களான தவான் 12 ரன்கள் , கோலி 20 ரன்கள் , பாண்ட் 16 ரன்கள் எடுத்து வெளியேற, அணியை காப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் ஷங்கர் 16 ரன்கள் எடுத்து அவுட்டாக முற்றிலும் சோர்ந்துபோன ரோஹித் ஷர்மா, நான் மட்டும் ஏன் விளையாட வேண்டும் என நினைத்தாரோ என்னவோ, இறங்கி வந்து பேட்டை பறக்கவிட்டார். பின்னாடி நின்ற அலெக்ஸ் கரே ஸ்டம்பஸில் இருந்த பயில்ஸை பறக்கவிட, ரோஹித் 56 ரன்கள் எடுத்த திருப்தியுடன் வெளியேறினார்.

இந்த போட்டியின் போதே, ரோஹித் ஷர்மா 8000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் நிறைவு செய்தார். அதிவேகமாக 8000 ரன்களை அதிவேகமாக அடித்த மூன்றாவது சர்வதேச வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். அவர் 200 இன்னிங்சில் இந்த ரன்களை அடித்து கங்குலியுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துகொண்டார். முதல் இடத்தில் இந்திய கேப்டன் கோலி 175 இன்னிங்சிலும், தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் 182 இன்னிங்சிலும் அடித்துள்ளார்கள். மேலும் இவர்களுக்கு அடுத்து ரோஸ் டெய்லர் 203 இன்னிங்சிலும், டெண்டுல்கர் 210 இன்னிங்சிலும், லாரா 211 இன்னிங்சிலும் அடித்துள்ளார்கள்.

மேலும் தொடக்க ஆட்டக்காரராக 6000 ரன்களை நிறைவு செய்துள்ளார். அவர் முதல் 2000 ரன்களை 82 இன்னிங்சிலும், அடுத்த 21 இன்னிங்சில் 3000 ரன்களையும், அடுத்த 23 இன்னிங்சில் 4000 ரன்களையும், அடுத்த 16 இன்னிங்சில் 5000 ரன்களையும், அடுத்த 20 இன்னிங்சில் 6000 ரன்களையும், அடுத்த 19 இன்னிங்சில் 7000 ரன்களையும், அடுத்த 19 இன்னிங்சில் 8000 ரன்களையும் கடந்துள்ளார்.