உல்லாசத்தின் போது இறந்ததாக கூறியது பொய்: காதலன் பரபரப்பு வாக்குமூலம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த குலமங்கலம் பகுதியை சேர்ந்தலர் கஸ்தூரி. மருந்துக்கடையில் வேலை செய்து வந்த, இவர் கடந்த மாதம் 28ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர், காணாமல் போன கஸ்தூரியை தேடி வந்த நிலையில், காவல்துறையிலும் புகார் அளித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் விசாரித்து, மழையூர் அருகேயுள்ள அதிரான்விடுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், நாங்கள் இருவரும் ஆதனக்கோட்டை சாலையில் உள்ள காட்டில் தனிமையில் இருக்கும்போது கஸ்தூரிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், கஸ்தூரி உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி, சரக்கு ஆட்டோவில் ஏற்றி தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஆற்றில் வீசிவிட்டு, சென்னை செல்ல முயன்றதாகவும் கூறினார். தொடர்ந்து மல்லிப்பட்டினத்தில் உள்ள ஆற்றுக்கு சென்ற ஆலங்குடி போலீசார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கஸ்தூரி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நாகராஜிடம் போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகராஜ் அளித்த வாக்குமூலத்தில் நானும், கஸ்தூரியும் ஆலங்குடியில் உள்ள ஆண்டிகுளத்தில் உறவினர் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்தோம். அப்போது எனக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பெண் பார்த்திருப்பதாக கஸ்தூரியிடம் கூறினேன்.

இதனால், கோபமான கஸ்தூரி, தன்னை ஏமாற்றிவிட்டதாக என்னிடம் சண்டை போட்டார். உடனே நான் கஸ்தூரியை கீழே தள்ளிவிட்டதில், பின்பக்க தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் அவர் உடலை மறைத்து எடுத்துச்சென்று ஆற்றில் வீசினேன் என கூறியுள்ளார். இதனையடுத்து புதுக்கோட்டை சிறையில் நாகராஜ் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாகராஜின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.