வித்தியாவை கடற்படையே கொன்றது!

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கடற்படையினரே கொன்றனர் என்றும், தம் மீது வீண்பழி சுமத்தி மக்களை நம்ப வைத்து விட்டனர் என்றும் வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபரான மகாலிங்கம் சசீந்திரன் சாட்சியமளித்துள்ளார்.

வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில், கடந்த இரண்டு மாத காலமாக நடைபெற்று வருகின்றது.

இதில் அரச தரப்பு சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் (திங்கட்கிழமை) எதிரிகள் தரப்பு சாட்சியப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்போதே எதிரியான சசீந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே புங்குடுதீவில் சாரதாம்பாள் மற்றும் தர்சினி ஆகிய இரு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் கடற்படையினரே செயற்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டிய சசீந்திரன், வித்தியா கொலைச் சூத்திரதாரிகளும் கடற்படையினரே என்று தெரிவித்துள்ளார்.

எனினும், அதனை மூடி மறைத்து தமது பெயர்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரையும் நம்ப வைத்து விட்டனர் என சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் இடம்பெற்ற அரச தரப்பு சாட்சியப் பதிவின் போது சாட்சியமளித்த குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா, இக் கொலையை குறித்த 9 சந்தேகநபர்களே செய்துள்ளனர் என்றும், இக்குற்றத்தை கடற்படையினர் மேற்கொண்டதைப் போன்று சித்தரிக்க எதிரிகள் முனைந்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.