நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்: ராஜித

தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளே உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்கவுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.

இது குறித்து சிங்கள ஊடகமொன்று அமைச்சர் ராஜிதவைத் தொடர்பு கொண்டு அவரது கருத்தைக் கேட்டறிந்திருந்தது.

அதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித,

எனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கண்ட போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

என் மீது முன்வைப்பதற்கு குற்றச்சாட்டுகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அதே நேரம் ஊழல் மோசடிகளில் முன்னணியில் உள்ளவர்களே எனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்திருப்பது குறித்து சிரிப்பாக உள்ளது.

எனினும் ஒன்று அல்ல பத்து நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டு வந்தாலும் அவற்றை என் மீதான நம்பிக்கையை நிரூபிக்கும் பிரேரணைகளாக மாற்றிக் கொள்வேன் என்றும் அமைச்சர் ராஜித தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.