இராணுவத் தளபதி வாய்ப்பை இழந்தார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

அதிபரிடம் இருந்து அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கூட்டுப்படைகளின் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ள போதிலும், ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இன்னமும் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகவில்லை என்று, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

ராவய வாரஇதழுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி பதவியில் இருந்து, ஜெனரல் கிரிசாந்த டி சில்வா விலகிக் கொள்ளாததால், அவர் வரும் ஓகஸ்ட் 21ஆம் நாள் வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என்றும், ராவய தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் 21ஆம் நாள் வரை, ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இராணுவத் தளபதி பதவியில் நீடிப்பாரேயானால், தற்போது, இராணுவத் தலைமை அதிகாரியாக இருக்கும், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பை இழக்கக் கூடும் என்றும் ராவய சுட்டிக்காட்டியுள்ளது.

மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, 55 வயதை எட்டுவதால், வரும் ஓகஸ்ட் 19ஆம் நாளுடன் ஓய்வுபெற வேண்டியிருக்கும் என்பதே அதற்கான காரணம் என்றும் ராவய செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, கூட்டுப்படைத் தளபதி நியமனத்துடன் புதிய இராணுவத் தளபதியின் நியமனமும் இடம்பெறும் என்று கடந்தவாரம் எதிர்பார்க்கப்பட்ட போதும், சிறிலங்காஅதிபரிடம் இருந்து அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.