போராட்ட குணம் நிறைந்த கும்ப்ளே, அதில் உறுதியாக நிற்கவில்லை: கவாஸ்கர்

இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேயின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை நீடிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

ஆனால் கும்ப்ளே நேற்று தனது பதவியில் இருந்து விலகினார். எனக்கும், விராட் கோலிக்கும் இடையிலும் சுமுகமான நிலை இல்லை என்று கூறியிருந்தார்.

தலைமை பயிற்சியாளர் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகியது குறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘அனில் கும்ப்ளே போன்ற போராட்டக்காரர்கள் தங்களது நிலையில் உறுதியாக இல்லாமல் இருப்பதை முதன்முறையாக பார்க்கிறேன்’’ என்றார்.

அனில் கும்ப்ளே விவகாரம் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கு இடையிலான மோதல் குறித்து எனக்கு சிறிய அளவிலேயே தெரியும். ஆனால், இந்திய அணிக்கு இது மிகப்பெரிய சோகம். அனில் குமப்ளே தலைமை பயிற்சியாளரானதில் இருந்து இந்தியா அனைத்தையும் வென்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் கும்ப்ளே அதிக அளவில் தவறு செய்தார் என்று என்னால் பார்க்க முடியவில்லை.

எல்லா அணிகளிலும் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், இந்த முடிவை நாம் பார்க்கிறோம். அனில் கும்ப்ளே விலக காரணம் இருந்திருக்கும். கும்ப்ளே பதவியை தொடர்வார் என்றுதான் நான் நினைத்தேன். கிரிக்கெட் ஆலோசனைக் குழு அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. மீண்டும் அவர் வலுவான நிலையுடன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், முதல் முறையாக கும்ப்ளே போன்ற போராட்ட குணம் படைத்தவர்கள், அந்த நிலையில் உறுதியாக இல்லாமல் உள்ளனர்’’ என்றார்.