கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கம்: உரிமையாளர் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் மகேந்திர சிங் டோனி.

இரண்டு உலககோப்பையை வென்று (2007 இருவது ஓவர், 2011 ஒருநாள் போட்டி) வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை டோனி இரண்டு கோப்பையை பெற்றுக்கொடுத்தார். அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011-ம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்றது. மேலும் 4 முறை (2008, 2012, 2013, 2015) 2-து இடத்தை பிடித்தது. இதுதவிர சாம்பியன்ஸ் ‘லீக்’ கோப்பையை 2 தடவை (2010, 2014) டோனி பெற்றுக்கொடுத்தார்.

ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணிகளும் கடந்த ஆண்டு ஆடவில்லை. இந்த ஆண்டும் ஆட முடியாது. இந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 அணிகள் இரண்டு ஆண்டுக்கு சேர்க்கப்பட்டன.

புனே அணிக்கு டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். அவரது தலைமையிலான புனே அணி கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் 7-வது இடத்தை பிடித்தது. 14 ஆட்டத்தில் விளையாடிய அந்த அணி 5 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. 9 போட்டியில் தோற்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி புனே அணியில் இருந்து டோனி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

புனே அணி கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் புனே அணி உரிமையாளர் சஞ்சய் சோயங்கா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டு சுமித் நியமிக்கப்பட்டதை பொது விவாதமாகும் என்று நான் நினைக்கவில்லை. மிடியா, சமூக வலை தளங்களில் இதுபற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒவ்வொரு வரையும் நான் மதிக்கிறேன். எங்கள் அணி நிர்வாகத்தின் இந்த முடிவு மிக புகழ் அடைவது தேவையில்லாதது. அணியின் நலன் கருதி தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். கடந்த ஆண்டு அணி மோசமான நிலையில் இருந்தது. இந்த ஆண்டு சிறப்பான நிலையை அடைய இந்த முடிவு எடுக்கப்பட்டது. டோனியை சந்தித்து பேசிய பிறகே இந்த முடிவை எடுத்தோம்.

டோனி உலகின் தலைசிறந்த வீரர் மற்றும் கேப்டன் ஆவார். நான் அவரது மிகப்பெரிய ரசிகன். எங்கள் அணி நிர்வாகம் எடுத்த இந்த முடிவை ரசிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.