போராடும் தமிழக மக்களை மோடி அவமதித்து விட்டாரே… பொங்கும் ராகுல் காந்தி!

பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 18 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

போராடி வரும் விவசாயிகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளை சந்திக்கச் சென்ற ராகுல்காந்தி விவசாயிகளைப் போன்றே பச்சை நிறத் துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு அவர்களது அருகில் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உடன் இருந்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, தமிழக மக்களை மோடி அவமதித்துவிட்டார் என்று கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும் தமிழர்கள் இந்தியாவின் மக்கள் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழக மக்களையும் மோடி மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே மோடி சலுகை காட்டி வருகிறார் என்றும் கடுமையாக சாடினார். அதனால்தான் விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார்.

பணக்காரர்களுக்கு பல லட்சம் கோடி கடனை மோடி அரசு ரத்து செய்துள்ளது. அப்படி இருக்க விவசாயிகளின் கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன் என்பது மட்டும் புரியவில்லை என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.