தொப்பியில் இருந்து குல்லாவுக்கு மாறிய டி.டி.வி.தினகரன்!

டி.டி.வி.தினகரன் இன்று ஆர்.கே.நகரில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது வழக்கமாக அணிந்து வரும் தொப்பி அணியாமல், இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார்.

T.T.V.Dinakaran
வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் சுமார் 40,000 இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் வாக்கை குறிவைத்து கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை ஆர்.கே.நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பர்மா பள்ளிவாசல் அருகே டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்பகுதியின் பெரிய பள்ளிவாசல் அது. இஸ்லாமிய வாக்காளர்களைக் குறிவைத்து பரப்புரை மேற்கொள்ளும் தினகரன் வழக்கமாக அணிந்து வரும் தொப்பி அணியாமல், குல்லா அணிந்து பிரசாரம் செய்தார்.

டி.டி.வி.தினகரன் பர்மா பள்ளிவாசல் அருகே பரப்புரை மேற்கொண்ட சிறிது நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வ.உ.சி.நகர் பள்ளிவாசல் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கினார்.

அப்போது, அப்பகுதியில் திடீரென்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களும் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர் காவல்துறை இரு பிரிவினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். மதுசூதனன் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு இஸ்லாமிய மக்களை சந்தித்து வரும் நிலையில் தீபா ஆதரவாளர்கள் படகு சின்னத்தை வைத்து மீனவ வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.