குற்றவாளி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நீடிக்க முடியாது : ஓபிஎஸ் அதிரடி

குற்றவாளியாக தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நீடிக்க முடியாது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து, சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்ற விளக்கத்தை ஓபிஎஸ் அணியினர் இன்று அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆரால் இந்த கட்சி தொடங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பின்னர் ஜெயலலிதாவால் 28 ஆண்டுகாலம் காப்பாற்றினார். அவர் இறந்துவிட்ட இந்த சூழ்நிலையில் அதிமுகவின் விதிப்படி பொதுச் செயலாளர் தேர்தல் மூலமாகத்தான் தேர்வு செய்ய முடியும் என்றார்.

இந்த சட்டவிதிக்கு மாறாக பொதுக் குழுவால் பொதுச் செயலாளர் நியமனம் செய்யப்படும் நடைமுறை முற்றிலும் தவறானது. சட்டத்திற்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையரிடம் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளோம். அவரும் எங்கள் வாதங்களை கவனமாக கேட்டுள்ளனர்.

சசிகலா முறைப்படியாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படாத சூழ்நிலையில் அவர் எந்தவித அதிகாரமும் படைத்தவர் அல்ல. புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் அவருக்கு இல்லை. ஏற்கனவே ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க சட்டவிதியில் இடம் இல்லை. இதுகுறித்தெல்லாம் ஆணையரிடம் எடுத்துக் கூறியிருக்கிறோம். நல்ல தீர்ப்பு வருமென எதிர்ப்பார்க்கிறோம்.

கட்சியின் சட்டவிதிப்படி, அசாதாரண சூழலில் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்தால் அடுத்த நிலையில் இருக்கின்ற நிர்வாகிகள் கட்சிப் பணிகளை கவனிப்பார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிடும் போது சின்னம் கோரும் உரிமை கழக பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது.

பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்தைக் கோருவதற்கு சசிகலா தரப்பினருக்கு அதிகாரம் இல்லை. பொதுச் செயலாளர் இல்லாத போது அடுத்த நிலையில் உள்ள பொருளாளருக்குத்தான் கட்சிப் பணி செய்ய சட்டவிதி இடம் கொடுக்கிறது.

பெரா குற்றவாளியான தினகரன் ஆர்.கே. நகரில் போட்டியிடுவது சட்டவிரோதமானது. இதுகுறித்தும் தேர்தல் ஆணையரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். இந்நிலையில், உண்மையான அதிமுகவான நாங்கள் ஆர்.கே. நகர் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் என்று ஓபிஎஸ் கூறினார்.