தங்கக்கொலுசு அணிவித்து இறந்த மகளின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தந்தை!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூலமட்டம் கிராமத்தை சேர்ந்த அனில்குமார்-சாந்தா தம்பதிகளின் மகள் அனாகா. 12-வது படித்துக் கொண்டிருந்த அனாகா கடந்த டிசம்பர் 16-ம் தேதி விபத்துக்குள்ளானார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனாகாவுக்கு அடுத்தடுத்து 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதனால் தங்கள் மகள் உயிர் பிழைத்துக் கொள்வார் என அனில்குமார்-சாந்தா தம்பதியர் நம்பினர்.

ஆனால் அவர்கள் நம்பிக்கைக்கு மாறாக கடந்த 24-ம் தேதி அனாகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அனாகாவின் உடல் அவர் படித்த பள்ளியில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக டிசம்பர் 25-ம் தேதி வைக்கப்பட்டது. அனாகாவின் தந்தை அனில் திடீரென யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்று தனது மகள் ஆசைப்பட்டு கேட்ட தங்கக் கொலுசை வாங்கி வந்து அவரது கால்களில் மாட்டி விட, அங்கிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

அனாகா நீண்ட நாட்களாக தங்கக்கொலுசு வேண்டுமென கேட்டதால் கிறிஸ்துமஸ் பரிசாக அதனை வாங்கிக் கொடுக்கலாம் என அனில் நினைத்திருந்தாராம், ஆனால் உயிரற்ற தனது மகளின் கால்களில் அதனை அணிய வேண்டிய சூழல் வரும் என கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார்.