இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? பலமுனைகளில் போட்டி! ரணில் ஓய்வு பெறுவாரா?

இலங்கையில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு தரப்பினர் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசாங்க தரப்பு பிரபலங்கள் சிலர் ஆயத்தமாகுவதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமகால அசராங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்து வரும் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் தற்போது வரையில் ஆயத்தமாக உள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2020 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற நம்பிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரவி கருணாநாயக்க, தயா கமகே ஆகியோரும் ஜனாதிபதியாகும் எதிர்பார்ப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான் மீண்டும் ஜனாதிபதி பொது வேட்பாளராக பெயரிடப்படுவார் என கடுமையான நம்பிக்கையில் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர் மற்றும் அவர்களது செயலாளர்கள், ஜனாதிபதி போராட்டத்திற்காக பணம் சேகரிப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விசேட அவதானத்தை செலுத்தியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னமே அறிவித்துள்ளார். எனினும் அவரை மீண்டும் போட்டியிட வைப்பதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.