மனித உரிமைகள் தினம்

வாழ்வதற்கான உரிமை, வெளிப்பாட்டு சுதந்திரம், கலாச்சார சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், உணவு, வேலை, கல்வி பெறுவதற்கான உரிமை இவையனைத்துமே மனிதனின் அடிப்படை உரிமைகளாகும்.

ஒருவர் எந்த தேசத்தையோ, மதத்தையோ, பாலினத்தையோ, மொழியையோ சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு இந்த அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படவேண்டும் என்பதுதான் நாகரிக மனிதனின் லட்சியமாகும். மனித உரிமைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. 1948-ல் முதன்முறையாக மனித உரிமைகள் தினத்தை ஐ.நா. கொண்டாடியது. 1950-ல் ஐ.நா. சபை, அனைத்து நாடுகளும் ஆர்வமுள்ள அமைப்புகளும் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10-ஐ, மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடும்படி அழைப்புவிடுத்தது. அதுமுதல் மனித உரிமைகள் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா 1947-ல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்றது. சுதந்திர தேசமாக தன்னை உருவாக்கிக்கொண்ட இந்தியா, ஜனநாயகப் பாதையைத்  தேர்ந்தெடுத்தது. அது முதற்கொண்டு இந்திய தலைவர்கள் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு கெளரவமான இடத்தைப் பெற முயன்றுவருகிறார்கள். ஒரு தேசம் உலகத்தின் பார்வையில் கெளரவமான இடத்தைப் பெற இரு விஷயங்கள் அவசியமானது. ஒன்று பொருளாதார வெற்றி. ராணுவ அடிப்படையில் வலுப்படுத்திக்கொள்ள மட்டுமின்றி, மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும் பொருளாதார நலன் முக்கியமானது.

இரண்டாவது, பொதுமக்களிடையே சமத்துவம். சமத்துவம்  என்பதை எப்படி வரையறுப்பது? அனைவரும் இவ்வளவு பணம்தான் வைத்திருக்கவேண்டும், இதுபோன்ற வீட்டில்தான் வசிக்கவேண்டும் என சட்டமியற்றுவதன் மூலமா? குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்குவது, மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதுமூலம் இதனை உறுதிசெய்யலாம். அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதிசெய்யும் பொருட்டே இடஒதுக்கீடு முறையை வலியுறுத்தி அதனை சட்ட நடைமுறைகளின்மூலம் செயல்படுத்தி சமத்துவத்தை நோக்கிய பயணத்தை நமது அரசியல், சமூகப் போராளிகள் உறுதிசெய்தனர்.

எனினும், உலகம் முழுவதும் மனித உரிமை மீறல்கள் இல்லவே இல்லாத நாடென்று எதுவுமில்லை. அந்த வகையில் சாதிய நடைமுறை வேரோடிப் போயுள்ள இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் ஏராளமாகவே உள்ளன. மேலும், அதிகாரம் மற்றும் ஆதாயத்துக்கான தொழிலாக அரசியல் இன்று பலராலும் பார்க்கப்படுவதால் அதன்வழியாக மனித உரிமைகளுக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய மிக எளிமையான சித்திரத்தைக் காண்போம். மனித உரிமைகளுக்கான ஆசிய மையமானது, இந்தியாவில் 2002- 2008-காலகட்டத்தில் காவல்நிலையத்தில் நாளொன்றுக்கு நாலு பேருக்கும் அதிகமாக மரணமடைந்துள்ளதாக அறிக்கை தந்துள்ளது. இந்தியாவில் 50 சதவிகித போலீஸ் அதிகாரிகள், சிறைவாசிகள் மற்றும் கைதிகளை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர் என தெரியவந்துள்ளது.

உலகிலேயே பாலியல்ரீதியாக பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம். குழந்தைகள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதிலிருந்து தடுக்க இந்தியா போஸ்கோ எனும் சட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஆனால், இத்தகைய பாலியல் குற்றங்களைச் செய்வோர் குழந்தைகளுக்கு நன்குதெரிந்த குடும்ப உறுப்பினர்களாகவோ, உறவினர்களாகவோ இருப்பதால் பெரும்பாலோர் புகார் தர முன்வருவதில்லை. புகார் தரப்பட்ட வழக்குகளிலும் தண்டனை வாங்கித் தரப்பட்ட வழக்குகள் குறைவென்பதால் நிலைமையில் பெரிய முன்னேற்றம் இல்லையெனச் சொல்லப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், நிர்ப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையும் இந்தியாவில் மிக அதிகம். இதை நீக்குவதற்கான உறுதியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க அரசுகள் தயங்கியே வருகின்றன. மேலும் உலகமயமாக்கல் நடவடிக்கை முதலாளித்துவத்துக்கு ஆதரவாக இருக்கிறதேயன்றி, தொழிலாளர் நலத்துக்கு ஆதரவாக இல்லை.

இந்தியாவில் பாலியல் தேவைகளுக்காகவும், கொத்தடிமைப் பணிகளுக்காகவும் மேற்கொள்ளப்படும் மனிதக் கடத்தல் மூலம் 8 மில்லியன் டாலர் அளவிலான சட்ட விரோத வருமானம் புரள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 10,000 நேபாளிப் பெண்கள், இந்தியாவுக்கு பாலியல் தொழிலுக்குக் கொண்டுவரப்படுகின்றனர். இந்தியப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக இந்தியாவுக்குள்ளும் வெளியிலும் கடத்தப்படுவது குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இல்லையெனினும், இந்த எண்ணிக்கை மிக அதிகமானது என்பதுமட்டும் நிச்சயம்.

சாதிய அடிப்படையிலான மனித உரிமை மீறல்கள்தான் இந்தியாவில் மிக அதிகம். குறிப்பாக, தலித்துகள் மேல்சாதி மற்றும் இடைநிலை சாதிகளால் வன்முறைக்கும், வன்கொலைக்கும் ஆளாவது குறித்த புள்ளிவிவரங்கள் இந்தியாவில் துல்லியமாக இல்லை.

இதற்கான புள்ளிவிவரங்களைத் தேடி நாம் வெகுதொலைவு செல்லவேண்டியது இல்லை. நம் கண்முன்னேயே பல சமயங்களில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதர்களை சாக்கடை உள்ளிட்ட கழிப்பிடங்களைச் சுத்தம்செய்ய, அடைப்புகளை நீக்க பயன்படுத்தக்கூடாது என சட்டமே இருக்கிறது. ஆனாலும் பல மாநிலங்களில் பெரும்பாலும் இந்தப் பணி தீண்டப்படாதவர்கள் வசமே ஒப்படைக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுகுறித்து உயர்நீதிமன்றம் கண்டித்தபின்பும், இத்தகைய பணிசெய்பவர்களை ஊடகங்களின் கண்களில் படக்கூடாதென்றும், அவர்களுக்கு பேட்டி தரக்கூடாதென்றும் அறிவுறுத்துகிறார்களே தவிர, தேவையான நவீன எந்திரங்களை வாங்கி, மனிதர்கள் கழிவகற்றும் இழிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மறுக்கிறார்கள்.

இன்னும் தலித்துகள் தோளில் துண்டணிய, சேரி தவிர்த்த பகுதிகளில் செருப்பணிய பல பகுதிகளில் அனுமதிக்கப்படுவதில்லை. பல டீக்கடைகளில் தனி கிளாஸ் நடைமுறை இருக்கிறது. பிற ஜாதிப் பெண்ணைக் காதலித்ததற்காக தலித் காலனிகள் கொளுத்தப்படுவதும், சாதி கெளரவத்தைக் காக்க தன் பெண்ணையோ, அல்லது காதல் செய்த குற்றத்துக்கு தலித் ஆணையோ வெட்டிக் கொள்ளும் கெளரவக் கொலைகள் அதிகரித்துவருவது கவலைக்குரிய ஒரு பிரச்சினையாகும்.

காவல் துறையில் டி.எஸ்.பி. போன்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு பெண் அதிகாரி சாதிய நெருக்கடி காரணமாக மரணமடைவதும், அந்த மரணத்தின் பின்னணியில் அவரைவிட சாதியிலும் பதவியிலும் மேல்நிலையிலுள்ள உயர் அதிகாரிகளின் பெயர்கள் சந்தேகிக்கப்படுவதும் மனித உரிமைகள் விஷயத்தில் நாம் மேலான இடத்தை அடைய நிறைய நாட்கள் இருப்பதையே காட்டுகிறது.