ஜேர்மனியில் இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஜேர்மனியின் மிகப் பெரிய நகரமான பெர்லினில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது.

எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தில் இருந்த CCTV கமெராவில் பதிவான ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

அதில் இளம்பெண் ஒருவர் ரயில் நிலையத்தின் சப்வேயில் உள்ள படிக்கட்டில் இறங்குகிறார்.

அப்போது அவர் பின்னால் நான்கு மர்ம நபர்கள் வருகிறார்கள். அதில் ஒருவன் கையில் மது பாட்டிலும், சிகரெட்டும் இருக்கிறது.

அந்த இளம் பெண் அந்த படியின் இரண்டடி இறங்கும் போது அந்த மர்ம நபர் அவரை தன் காலால் வேகமாக எட்டி உதைக்க அவர் அப்படியே படியிலிருந்து உருண்டு கீழே விழுகிறார். பின்னர் அந்த மர்ம நபர் சாவகாசமாக அந்த இடத்தை விட்டு நகருகிறார்.

எட்டி உதைத்த அந்த நபருடன் இருந்த இன்னொரு நபர் அந்த பெண் கீழே விழுந்ததை பொறுமையாக பார்த்துவிட்டு படிக்கட்டில் இருந்த மது பாட்டிலை எடுத்து கொண்டு அங்கிருந்து நகருவது போல அந்த வீடியோ காட்சியில் உள்ளது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கூறுகையில், படியிலிருந்து கீழே விழுந்த அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அருகில் இதை பார்த்தவர்களை விசாரத்ததில் பெண்ணை கீழே தள்ளிய அந்த மர்ம நபருக்கு 26 வயதிருக்கும் என தெரிகிறது.

மேலும் CCTV கமெராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.