தனித்து நின்று போராடி வென்ற வீர மங்கை ஜெயலலிதா!

கொடிய ஆணாதிக்க சமூகத்தில், தனித்து நின்று போராடி வென்ற முன்மாதிரி பெண் போராளியே வீர மங்கை ஜெயலலிதா என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தனது முகநூல் தளத்தில் கூறியுள்ளார்.

இதன் போது மேலும் கூறியுள்ளதாவது,

ஜெயலலிதாவை, தமிழக தமிழின தலைவர் என்று வரையறை செய்வது அவரை குறைத்து மதிப்பிடுவதாகும்.

தமிழக தமிழர்களைவிட, அவரை போற்றி கொண்டாட, பெண்ணுரிமையாளருக்கும், பால் சமத்துவவாதிகளுக்கும் மிக அதிகமான காரணங்களும், உரிமைகளும் இருக்கின்றன. இதுவே அவரை பற்றிய நியாயமான கணிப்பீடு என நான் நம்புகிறேன்.

அவர் வாழ்ந்து, மறைந்த பின்னணியில் அவர் ஒரு இரும்பு பெண். முன்மாதிரி பெண். வீர மங்கை. புரட்சி தலைவி என்பதில் எனக்கு இரு வேறு கருத்துகள் இல்லை.

வீரமங்கை ஜெயலிதாவுக்கு எனதும், தமிழ் முற்போக்கு கூட்டணியினதும், ஜனநாயக மக்கள் முன்னணியினதும் இதயபூர்வ அஞ்சலிகள்.

முதல்வர் ஜெயலிதாவின் ஆட்சிகால நடவடிக்கைகள் தொடர்பில், அவர் அறிவித்த கருத்து நிலைப்பாடுகள் தொடர்பில் கொள்கை முரண்பாடுகள் உள்ளோருக்கும் அவரது மறைவு மனதில் ஒரு வெறுமையுணர்வை ஏற்படுத்திவிட்டது.

கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், கட்சி பொதுசெயலாளர், சட்டமன்ற உறுப்பினர், முதல்வர் என்று அவர் படிப்படியாக ஒவ்வொரு கட்டத்திலும் போராடியே வென்றார்.

எதுவும் அவருக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை. அதுவே அப்படியே அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அமைந்திருந்தது.

அவரை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்தி, சிறுமைப்படுத்தி, கதை புனைந்து, அழித்து, வீழ்த்திட அவரது அரசியல் சமூக எதிரிகள் எடுத்த எல்லா முயற்சிகளையும், ஜெயலலிதா ஒரு பெண்ணாகவே எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.

பலவேளைகளில் அவர் தனித்தே நின்றார். தனித்தே ஜெயித்தார். அந்த தனிமை அவரை வாட்டி வதைத்தாலும் அவர் அசையவில்லை.

ஆகவே அவரது அரசியல் கொள்கை நிலைப்பாடுகளையும், அரசியல் பாத்திரத்தையும் பின்தள்ளிவிட்டு, ஜெயலிதாவின் பெண் என்ற மிகப்பெரிய பாத்திரம் முன் நிற்கிறது என நான் நினைக்கின்றேன்.

அவரை இலங்கையின் முதல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் ஒப்பிட வேண்டாம். பிரித்தானிய பிரதமர் மார்கரட் தச்சருடன் ஒப்பிட வேண்டாம். அவரை இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன்கூட ஒப்பிட வேண்டாம்.

ஜெயலிதாவை அவர் வாழ்ந்து, மறைந்த தமிழக பின்னணியில் சூழலில் வைத்து பார்க்க வேண்டும். அவர் வளர்ந்து, எழுந்து வந்த தமிழக சினிமா அரசியல் பின்னணியில் வைத்து பார்க்கும்போது அவரது, ஆளுமை அகலமாக தெரியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவர் வாழ்ந்து, மறைந்த பின்னணியில் அவர் ஒரு இரும்பு பெண். முன்மாதிரி பெண். வீர மங்கை. புரட்சி தலைவி என்பதில் எனக்கு இரு வேறு கருத்துகள் இல்லை.

அவருக்கு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி, ஒட்டுமொத்த தமிழினம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சார்பாக எங்கள் இதயபூர்வமான அஞ்சலிகள் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.