நைட்டி அணிந்து பெண் போல் வாழ்ந்தேன்…தேனிலவு சென்றேன்: மதனின் திடுக்கிடும் வாக்குமூலம்

கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதனை கடந்த 21 ஆம் திகதி திருப்பூரில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

எஸ்ஆர்எம் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டு வாங்கித் தருவதாக 123 பேரிடம் 84.24 கோடி மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன், பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

கைதுக்கு பயந்து, மதன் திடீரென கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார்.

இந்நிலையில் கைதாகியுள்ள மதனை பொலிசார் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

பொலிசாரிடம் மதன் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

கடந்த ஆண்டு எஸ்ஆர்எம் வேந்தர் பச்சமுத்துவிடம் இருந்து என்னை பிரிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். என் மூலம் மருத்துவக் கல்லூரிக்கு சீட் வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு பச்சமுத்துவின் தம்பி சீனிவாசன் எனக்கு எதிராக செயல்பட்டார். இதனால் வடபழனி சிம்ஸ் மருத்துவமனை அருகே அவரை ஆள் வைத்து வெட்டினேன். அவர் படுகாயமடைந்தார்.

அதன் பின்னர், நம் குடும்பத்து ஆட்கள் மீது கை வைக்கிறான் என்று சொல்லி என்னை ஒதுக்க ஆரம்பித்தனர். ரவி பச்சமுத்து கல்லூரி நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்ததும், என்னை முழுமையாக ஓரம் கட்டினார்.

இந்நிலையில் வழக்கம்போல கடந்த ஆண்டும் சீட் கிடைக்கும் என்று மாணவர்களிடம் பணம் வாங்கினேன். அதில் பாதி பணத்தைத்தான் நிர்வாகத்தில் கட்டினேன். இந்த ஆண்டு பணம் வாங்கினேன். பின்னர் கொஞ்ச பணத்தை நிர்வாகத்தில் கட்டினேன். மீதம் உள்ள பணத்தை நான் செலவு செய்தேன்.

அப்போதுதான் ரவிபச்சமுத்து, இந்த ஆண்டு சீட் உங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டார். இது குறித்து பச்சமுத்துவை தொடர்பு கொள்ள முயன்றேன், ஆனால் முடியவில்லை.

இதனால் நானும் தப்பிக்க வேண்டும், பச்சமுத்துவையும் மாட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன், அதற்காக திட்டம்போட்டேன்.

பொலிசாரிடம் இருந்து தப்பிக்க கீதாஞ்சலியுடன் ஹரித்துவார் தப்பி சென்றேன். அப்போது அவரது உறவினரை பொலிசார் பிடித்து விசாரிப்பது தெரிய வந்ததால் கீதாஞ்சலியை தமிழகத்திற்கு அனுப்பினேன்.

தமிழகத்துக்கு வந்த கீதாஞ்சலி, சென்னையில் இருந்தபடியே பணம் உள்பட அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். பின்னர் ஹரித்துவாரில் போலி ஆவணங்கள் மூலம் 60 லட்சத்துக்கு கார் வாங்கினேன்.

10 ஏக்கரில் பண்ணை வீட்டுடன் இடம் வாங்கி வைத்துள்ளேன். பின்னர் புனேவில் சிறிது காலம் தங்கியிருந்தேன்.

மீண்டும் ஹரித்துவாரில் தங்கியிருந்தேன். பின்னர் கீதாஞ்சலி, தன்னுடைய உறவினர் சேகர் மூலம் எனக்கு பெண்களை சப்ளை செய்தார்.

பொலிசார் கீதாஞ்சலியை பிடித்து விசாரித்த தகவல் எனக்கு கிடைத்ததும் அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டேன். பின்னர் சேகரிடமும் பேசாமல் இருந்தேன்.

என்னுடைய 2வது மனைவியின் உறவினர்தான் திருப்பூர் திருமுருகன் பூண்டியில் உள்ள வர்ஷா(எ)வர்ஷினி.

இவரது கணவர் விவாகரத்து பெற்றுவிட்டார், வர்ஷாவுக்கு 2 குழந்தைகள் உள்ளன, அவரை எனக்கு 2 ஆண்டுகளாக தெரியும்.

2வது மனைவிக்கு தெரியாமல் அவருடன் பல நாட்கள் உல்லாசமாக இருந்தேன். அவரை ஹரித்துவாருக்கு வரவழைத்தேன். பின்னர் பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்தோம். அவர் தன்னை திருமணம் செய்யும்படி கூறினார்.

ஆனால் அவரை திருமணம் செய்யாமல் மோதிரம் மாற்றிக் கொண்டேன். பின்னர் கோவா சென்று தேனிலவு கொண்டாடினோம்.

அதன்பின் திருப்பூர் திருமுருகன் பூண்டியில் அவருக்கு வீடு மற்றும் கார் வாங்கிக் கொடுத்தேன். பின்னர் 2 பேரும் தீபாவளி நேரத்தில் திருப்பூர் சென்றோம், அவரது வீட்டில்தான் வசித்து வந்தேன்.

காதலியின் வீட்டில் இருப்பது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக வீட்டில் எப்போதும் நான் பெண் போல நைட்டிதான் அணிந்திருப்பேன். வீட்டு பரணில் பலகை அல்லது ஸ்கிரீன் போட்டுதான் எல்லோரும் மூடுவார்கள், நான் சிமென்ட்டால் மூடினேன்.

ஒரு ஆள் செல்லும் அளவுக்கு மட்டும் பலகையால் பரணை மூடினோம். அதற்கும் சுவற்றில் அடிக்கும் பெயின்டை அடித்து விட்டேன். பொலிசார் வந்தால் அங்கு ஒளிந்து கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். நான் நினைத்தது போல, பொலிசார் சேகரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

அவர் 2 நாட்களுக்கு முன் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதற்கு நான் ஹரித்துவாரில் இருப்பதாக தெரிவித்தேன். பொலிசார் சேகருடன் ஹரித்துவார் சென்றனர். அங்கு நான் இல்லாததால் மீண்டும் மெசேஜ் கொடுத்தனர்.

அப்போது என் செல்போன் திருப்பூரில் இருப்பதை பொலிசார் தெரிந்து கொண்டனர். திருப்பூரில் நான் வர்ஷாவுடன்தான் இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். பின்னர் பொலிசார் வந்து கதவை தட்டியதும் படுக்கை அறையில் இருந்து ஓடி, பரணில் ரகசிய அறையில் நைட்டியுடன் ஒளிந்து கொண்டேன்.

பொலிசார் வந்து தேடியபோது நான் கிடைக்கவில்லை. படுக்கை அறையில் இருந்த என் செல்போனை கைப்பற்றினர்.

நான் பிடிபட்ட அன்று காலை வரை வாட்ஸ் அப்பில் இருந்ததை உறுதி செய்து கொண்டு, நான் அந்த வீட்டில்தான் மறைந்திருக்கிறேன் என்று உறுதிப்படுத்திக் கொண்டு, வர்ஷாவிடம் துருவி துருவி விசாரித்தனர்.

அதில் அவர் உண்மையை போட்டு உடைத்து விட்டார். இதனால் பொலிசார் பரணில் உள்ள கதவை தட்டினர்.

பின்னர் பொலிசார் பலகையை உடைத்தனர். இதனால் நான் வெளியில் வரவேண்டியதாயிற்று என்று தெரிவித்துள்ளார்.