சிறுநீரகம் காக்க சிறப்பான யோசனைகள்!

சிறுநீரகங்கள் நம்முடைய துப்புரவுத் தொழிற்சாலை. கிட்டத்தட்ட 10 லட்சம் நெப்ரான்களை (பில்டர்கள் உள்ள அமைப்பு) உள்ளடக்கியது சிறுநீரகம்.

நீரை மட்டுமல்ல… தேவைக்கு அதிகமான உப்பு, உடலுக்குள் புகுந்துவிட்ட நச்சுக்கள், தேவைக்கு மீந்துவிட்ட மருந்துக்கூறுகள் எல்லாவற்றையும் வெளித்தள்ள, வைட்டமின் டி தயாரிப்பு, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்காக `எரித்ரோபாய்டின்’ (Erythropoietin) உற்பத்தி செய்வது, இரத்த அழுத்தம் சீராக இருக்க ‘ரெனின்’ சுரப்பை அளவோடு தருவது… என சிறுநீரகம் செய்யும் பணிகள் மிகப்பெரியது.

நம் இதயத்தைப்போலவே ஓயாமல் வேலை செய்துகொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம்.தற்போது சர்க்கரை நோயின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வரும் இன்னோர் அபாயம், சிறுநீரகம் தொடர்பான நோய்கள்.

இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும் பட்சத்தில், பின்னாளில் அது சிறுநீரகத்தை பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.

அடிக்கடி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுய வைத்தியம் செய்து கொள்ளுதல்… என சிறுநீரகம் பாதிக்க வேறு காரணங்களும் உள்ளன.

எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இங்கே சிறுநீரகங்களைக் காக்க சில யோசனைகள்…

* மற்ற நோய்களுக்கு இல்லாத அளவுக்கு சிறுநீரக நோய்களுக்கு உணவில் மிகுந்த கவனம் தேவை. உணவுக் கட்டுப்பாடு அவசியம். அதில் அலட்சியமாக இருப்பது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

இன்றுவரை சிறுநீரகச் செயலிழப்பை குணப்படுத்த மருந்துகள் இல்லை. நோயின் தீவிரத்தைத் தள்ளிப் போடத்தான் முடியும். எனவே, சிறுநீரகத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எந்த விஷயத்துக்கும் இடம்கொடுக்கக் கூடாது.

* தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். எவ்வளவு வேலை, பணிச்சுமையாக இருந்தாலும் இதை மறக்கக் கூடாது. சிறுநீரகச் செயல் இழப்பு வந்தால், டாக்டர் பரிந்துரைத்த அளவு மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்.

* சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவும் வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளை வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* 40 வயதை நெருங்கி விட்டீர்களா? அதிக உப்பைத் தவிர்ப்பது நல்லது. அதிக உப்பு, சிறுநீரகச் செயல்பாட்டுக்கு சிரமம் கொடுக்கும்.

* சிறுநீரக நோய் இருப்பவர்கள், உணவில் நீர், புரதம், சோடியம் மற்றும் பொட்டாசியம் உப்புக்கள், இரும்புச்சத்து ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

உடலில் இருந்து எந்த அளவுக்கு சிறுநீர் வெளியேறுகிறதோ, அதைப் பொறுத்து நீர் அருந்தும் அளவை மருத்துவர் குறிப்பிட்டுக் கொடுப்பார். அதை அப்படியே பின்பற்ற வேண்டும்.

இரத்தத்தில் இருந்தும், சிறுநீரில் இருந்தும் வெளியேறும் உப்பின் அளவைப் பொறுத்தே நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவும் இருக்க வேண்டும்.

* புரத உணவைப் பொறுத்தவரை காய்கறியில் இருந்து கிடைக்கும் புரதம்தான் சிறந்தது. சிக்கனில் இருந்து கிடைக்கும் புரதத்தைவிட பாசிப்பயறில் இருந்து கிடைக்கும் புரதம் சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்றது.

ஏனென்றால், சிக்கனில் புரதத்துடன் உப்புக்களும் கூடுதல் அளவில் உள்ளே வந்துவிடும். பயறில் கிடைக்கும் புரதத்தில் அந்தப் பயம் இல்லை.

* சோடியமும் பொட்டாசியமும் குறைந்த அளவில் உள்ள பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனியைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் பொட்டாசியம் அதிகம்.

* பைனாப்பிள், பப்பாளி, கொய்யா ஆகியவை குறைந்த அளவு பொட்டாசியச் சத்து உள்ளவை. இவற்றைச் சாப்பிடலாம்.

* கேரட், பீட்ரூட், காலிபிளவர், நூல்கோல், பருப்புக்கீரை இவற்றில் சோடியம் அதிகம் உள்ளது. இவற்றையும் உணவில் தவிர்க்க வேண்டும்.

* காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு, நன்கு வேகவைத்து, பிறகு அந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இப்படியான சமையல் முறை அதிக அளவில் உப்பை உணவில் தங்காமல் பார்த்துக்கொள்ளும்.

* வெண்ணிறப்பூவான சிறுகண்பீளை, நீர்முள்ளிச் செடி, நெருஞ்சி முள், பூனை மீசைச்செடி ஆகியவற்றை தேர்ந்தெடுத்து தேநீராக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறுநீரக நோயாளிகளுக்கு நல்ல பயன் தரும்.

* சரியான உடற்பயிற்சி, யோகா மற்றும் பிராணாயாமம், மருத்துவரின் அறிவுரைப்படி முறையான சிகிச்சை, உணவில் கட்டுப்பாடு ஆகியவை மட்டுமே சிறுநீரக நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

சிறுநீரக நோயாளிகள் கூடுதல் அக்கறையோடு தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது நல்லது.

– Vikatan