ஒரு மனிதரால் இப்படியும் கொள்ளையடிக்க முடியுமா? அதிர்ச்சியில் ஆழ்ந்த நீதிபதி

ஜேர்மனி நாட்டில் நபர் ஒருவர் அதிரடியாக திட்டமிட்டு நூதன முறையில் ரூ.70 லட்சம் வரை கொள்ளையிட்டுள்ள சம்பவம் அந்நாட்டு நீதிபதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச அளவில் பிளாஸ்டிக் மற்றும் குளிர்பான டின்களை மறுசுழற்சி செய்வது என்பது மிகப்பெரும் சவாலாக அமைந்து வருகிறது.

இதனை சீர்ப்படுத்த ஜேர்மன் அரசு ‘பிளாஸ்டிக் மற்றும் குளிர்பான டின்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்களை(bottle-recycling machines) நாடு முழுவதும் பொது இடங்களில் வைத்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் குளிர்பான டின்களை பயன்படுத்திய பொதுமக்கள் அவற்றை இந்த இயந்திரங்களில் நுழைத்தால், அது தானாக மறுசுழற்சி செய்துவிடும்.

இதுமட்டுமில்லாமல், நபர் உள்ளே செலுத்தும் டின்களின் விலையில் ஒரு பகுதியை அந்த நபருக்கு திரும்ப கிடைத்துவிடும். அதாவது, டின்களை உள்ளே நுழைக்கும்போது அதன் விலை மதிப்பை அறிந்து அந்த இயந்திரம் பணத்தை திருப்பி வெளியேற்றிவிடும்.

பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த வசதியை தான் Colonge நகரை சேர்ந்த 37 வயதான மனிதர் ஒருவர் தவறாக பயன்படுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னால் 5,000 யூரோ மதிப்பில் விசேஷமாக தயாரிக்கப்பட்ட மின் சாதனப்பொருளை அவர் ஒரு மறுசுழற்சி இயந்திரத்திற்குள் ரகசியமாக பொருத்தியுள்ளார்.

பின்னர், காலியான ஒரு பாட்டிலை இயந்திரத்திற்குள் நுழைத்துள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே ஒரு மின் சாதனப்பொருளை உள்ளே பொருத்தியுள்ளதால், அதன் கட்டளைப்படி பாட்டில் உடையாமல் அப்படியே வெளியேறியுள்ளது.

அதேசமயம், அந்த பாட்டிலுக்கான பணத்தை மறுசுழற்சி இயந்திரம் வெளியேற்றியுள்ளது. இதே வழிமுறையை பயன்படுத்திய நபர் அந்த ஒரே பாட்டிலை 1,77,451 முறை இயந்திரத்திற்குள் செலுத்தி வெளியே எடுத்துள்ளார்.

இதன் மூலம் அந்நபருக்கு 44,362 யூரோ(69,78,264 இலங்கை ரூபாய்) கிடைத்துள்ளது. ஆனால், எத்தனை நாட்கள் இதனை அந்நபர் செயல்படுத்தி வந்தார் என்பது தெரியவரவில்லை.

எனினும், நபரின் இந்த அதிரடி கொள்ளை வெளியே தெரியவந்ததும் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்தபோது மனிதரின் திட்டத்தை பார்த்து நீதிபதியே ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுபோன்ற மனிதர்களால் அரசு நல்ல திட்டங்களை தொடங்கினாலும் அதனை முழுமையாக பொதுமக்களுக்கு கொண்டு செல்ல முடியாது.

எனவே, குற்றம் புரிந்த நபருக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக கூறி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.