சென்னை மருத்துவருக்கு அரங்கேறிய சோகம்..!!

சென்னையில் உள்ள அண்ணாநகர் கிழக்கு பகுதியை சார்ந்தவர் மருத்துவர் பிரகாஷ் (வயது 40). இவர் அங்குள்ள பகுதியிலேயே மருத்துவமனை நடத்தி வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை அருகே மற்றொரு மருத்துவமனையையும் நடத்தி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது கும்மிடிப்பூண்டி மருத்துவமனையில் இருந்து தனது நண்பர்களான விருகம்பாக்கம் கிஷோர் (வயது 31), வடபழனி பிரபு (வயது 30), பெரம்பூர் கிரண் (வயது 34) ஆகியோருடன் காரில் சென்னையை நோக்கி புறப்பட்டுள்ளார்.

கிஷோர் காரை இயக்க, முன் இருக்கையில் பிரகாஷ் அமர்ந்து இருந்த நிலையில், மீதமுள்ள இருவரும் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து இருக்கின்றனர். இவர்களின் கார் கவரப்பேட்டை புதிரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்த நிலையில், சாலையோர தடுப்பில் மோதி தலைகுப்பற கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதியாகினர். ஆனால், மருத்துவ பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், ப்ரகாஷிற்கு திருமணம் முடித்து மகாலட்சுமி (வயது 35) என்ற மனைவி மற்றும் கவின் (வயது 12) என்ற மகனும், கயல் (வயது 9) என்ற மகளும் இருக்கின்றனர். நண்பர்கள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.