உயிர் கொல்லி வைரஸில் இருந்து மீண்டவரை வைரஸ் மீண்டும் பாதிக்குமா?

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் அந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

ஆனால், இதற்கான பதில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் விஞ்ஞானிகளின் பதில் சாத்தியமில்லை என்பதே.

சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், கரோனா பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு, அந்த தொற்றை எதிர்க்கும் ஆற்றல் உடலில் உண்டாகிவிடுவதாக விளக்கம் அளித்துள்ளனர்.

ஆனால், இந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது எந்த அளவுக்கு பலனளிக்கும், எத்தனை காலத்துக்கு செயல்படும் என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவருக்கு சில வாரங்களுக்குப் பிறகு கரோனா பரிசோதனை செய்யும் போது கரோனா இருப்பதாக முடிவுகள் வருகிறது, இது முதல் முறை பாதித்த கொரோனா வைரஸின் இறந்த துகள்தான் என்றும், சிலருக்கு தவறான பரிசோதனை முடிவுகள் வர வாய்ப்புள்ளதாகவுமே நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு உதாரணமாக இரண்டாவது முறை கொரோனா உறுதி செய்யப்படும் போது அவருடன் இருந்த யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும், இரண்டாவது முறை கொரொனா உறுதியானவர் மூலமாக கொரோனா பரவியதாக எந்த தகவலும் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

இதுபோன்ற வைரஸ்களால் பாதிப்பு ஏற்படும் போது, மீண்டும் அதே வைரஸ் அவர்களைத் தாக்க 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு காலம் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே நடைமுறை கொரோனா தொற்றுக்கு பொருந்துமா என்பதை இவ்வளவு சீக்கிரம் கணிக்க முடியாது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் உடலில் உருவாகும் வைரஸை எதிர்க்கும் ஆற்றல், ஒரு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் என்றும், அதன்பிறகு மீண்டும் இந்த தொற்று பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவே கூறப்பட்டிருந்தது.

ஆனால், உடலில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள, அதற்கு எதிராக உருவான வைரஸை எதிர்க்கும் ஆற்றல் மட்டுமே இல்லை, அதில்லாமல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் உறுதுணையாக இருக்கும். அதன் மூலம் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு தடுக்கப்படும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த விளக்கங்களைப் பார்க்கும் போது ஒருவருக்கு கொரொனா தொற்று இரண்டாவது முறை பாதிக்கும் அபாயம் மிகவும் குறைவு என்பதே தெளிவாகிறது.