இலங்கை மீண்டும் தனிமைப்படுத்தப்படும்!

இலங்கை மீண்டும் சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்படும் நிலையை நோக்கிச் சென்றுக்கொண்டுள்ளது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றை மேற்கோள் காட்டி இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் வெளிவிவகார கொள்கை பேரழிவு நிலையில் உள்ளது.

இலங்கை மீண்டும் மிகவேகமாக மோதல்போக்கு மற்றும் சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்படும் நிலையையை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் குறிப்பாக 2015 இல் இலங்கை உலகத்துக்கு தன்னை திறந்ததுடன் , அனைத்து அதிகார சக்திகளுடனும் குறிப்பாக அமெரிக்காவுடன் நாங்கள் மிகச்சிறந்த உறவை கொண்டிருந்தோம்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்

44 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரியொருவரின் விஜயமாக அது காணப்பட்டது.

ஐக்கியநாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.

அவ்வேளையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நல்ல செய்தி வரும் நாடு என இலங்கையை அழைத்தார்.

ஆசியாவிற்கான தனது இறுதிப்பயணத்தை மேற்கொண்டு 2016 இல் பராக் ஒபாமா வியட்நாம் சென்றவேளை அவர் கொழும்புக்கு வர இணங்கினார் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பமாக அது அமைந்திருக்கும் அந்த வருடம் மே மாதம் அது நிகழ்ந்திருக்கும் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை வெசாக்கினை கொண்டாடுவதற்கு முதல் நாளன்று பராக் ஒபாமாவின் விஜயம் இடம்பெறும் என திட்டமிடப்பட்டிருந்தது.

அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மைத்திரிபால சிறிசேன இதன் காரணமாக மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தார்,அவரை அழைத்து வாருங்கள் நாங்கள் இருவரும் இணைந்து வெசாக்கினை பார்வையிடலாம் என சிறிசேன தெரிவித்தார் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்க ஜனாதிபதியின் மனதில் வேறு விடயங்கள் காணப்பட்டன, அவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு உரையாற்ற விரும்பினார் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த விஜயம் இறுதியில் இரத்துச்செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேபோன்று முழு உலகமும் எங்களுடன் இருந்தது, ரஸ்யா சீனா ,ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாங்கள் நெருக்கமான உறவை கொண்டிருந்தோம் என குறிப்பிட்டார்.