யாழ் – பலாலி வீதியில் விபத்து.!!

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள யாழ் தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தலையில் படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு நின்ற மக்கள் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்குமாறு அருகில் இருந்த இரண்டு தனியார் வைத்தியசாலைகளிலும் உதவி கோரியிருந்தனர்.

இருந்தும் தங்களால் இவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று இரண்டு வைத்தியசாலை நிர்வாகத்தினரும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் முதியவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காக நொதோண் வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியைக் கோரியபோதும் அதற்கும் அவ் வைத்தியசாலை மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.