திருமணத்துக்கு பின்னர் நடிகைகள் நடிக்கக் கூடாதா? டிவிட்டரில் கேள்வி எழுப்பிய ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

நேர்கொண்ட பார்வை மற்றும் ஜெர்ஸி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிகைகளின் திருமண வாழ்வுக்குப் பின்னான நடிப்பு வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆர்வமாக இயங்கி வருபவர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடல்களயும் நடத்துவார். வழக்கமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவர் தற்போது சில கேள்விகளை ரசிகர்களிடம் எழுப்பி அதற்கான பதிலைக் கேட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஒரு நடிகை தன்னுடைய திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்கும் ஆசையை விட்டுவிட வேண்டுமா? மிகப்பெரிய நடிகை மட்டுமல்ல… சாதாரண ஒரு சிறு நடிகை கூட. உங்களிடம் இதற்கான பதிலை எதிர்பார்க்கிறேன். இதுபற்றி விவாதியுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

மேலும், ’என்னுடை தோழியான நடிகை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அவர் என்னிடம் திருமணத்துக்குப் பின் நான் நடிக்க வேண்டுமா? எனக் கேட்டார். ஒரு நடிகையே இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ’ எனவும் ‘ஒரு ஆண் நடிகர் மட்டும் திருமணத்துக்குப் பின்னர் கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்வதில்லையா?’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.