எலும்பு மஜ்ஜை புற்றுநோய் பற்றி உங்களுக்கு தெரியுமா!

புற்று நோய் என்பது, மனித உடலில் தேவைக்கு மிகுந்த செல்களை உற்பத்தி செய்து கட்டியாக மாற்றுகிறது. அது நாள்பட அதன் அருகில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி அந்த குறிப்பிட்ட நபரை கொன்று விடுகிறது.

இத்தகைய நோய்க்கு இன்று பல மருத்துவ முறைகள் உள்ளன. ஆரம்ப கட்டத்தில் கண்டறிப்படும் புற்றுநோய்கள் குணமாகிறது.

ஆனால், குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கு ஆரம்பத்தில் சில அறிகுறிகள் தென்பட்டாலும், அது புற்றுநோயாக இருக்கும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை.

அத்தகைய ஒன்றுதான் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் (bone Marrow Cancer).இந்த புற்றுநோய், எலும்பினுள் இருக்கும் திரவத்தில் ஏற்படுகிறது. அந்த திரவம், கடற்பாசி போன்று காணப்படுகிறது.

இந்த எலும்பு மஜ்ஜைகள், உடலில், ரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள், பிளேட்லெட்டுகள் உருவாக்கத்திற்கான காரணியாகும். மொத்தமாக கூற வேண்டும் என்றால், இரத்த உற்பத்தி உறுப்பு

இந்த எலும்பு மஜ்ஜையில், அசாதாரண வளர்ச்சியே புற்றுநோயாக மாறுகிறது. மற்ற புற்றுநோய்கள், எலும்பு மஜ்ஜையை தாக்க வாய்ப்புள்ளது. ஆனால், எலும்பு மஜ்ஜை புற்றுநோய் எப்போது மற்ற உறுப்புகளை தாக்குவதில்லை. மேலும், இதற்கும் எலும்பு புற்றுநோய்க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

பல்வேறு விதமான எலும்பு மஜ்ஜை புற்றுநோய் உள்ளன. அதை பற்றிய விரிவான தகவல்கள் பார்க்கலாம்.

பல மைலோமா (Multiple myeloma)

எலும்பு மஜ்ஜை புற்றுநோயில் அதிக அளவு காணப்படுவது பல மைலோமா தான். இது பிளாஸ்மா செல்களில் இருந்து துவங்குகிறது. அதன்படி நோயுற்றவர்கள், நோய்யெதிர்ப்பு சக்தியை முற்றிலும் அழிக்கிறது.

இந்த வகை புற்றுநோய் ஒருவரை தாக்கியதும், அவரது உடலில் கட்டிகள் உருவாக்கி எலும்புகளை தளர்வடைய செய்யும்.

அறிகுறிகள்

– இரத்த சிவப்பணு குறைப்பாடு, உடல் சோர்வு

– இரத்த போக்கு உருவாகும்

– சிறிது நாட்களில் இரத்த வெள்ளை அணுக்கள் பாதிக்கும்

– தீவிர தாகம்

– அடிக்கடி சிறுநீர்கழித்தல்

– நீரிழப்பு

– வயிற்று வலி

– பசியின்மை

– மயக்கம்

– கால்சியம் குறைபாடு

– எலும்புகளில் வலி

– சிறுநீரகம் பாதிப்பு

– நரம்பு மண்டலம் பாதிப்பு காரணமாக கூச்ச உணர்வு

லுகேமியா (Leukemia)

இரத்த வெள்ளை அணுக்களை தாக்கும். இது உடலில், அசாதாரண வெள்ளை அணுகளை உருவாக்கி கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில், இரத்த அணுக்களான, சிவப்பு அணுகளையும், பிளேட்லட்டுகளையும் குறிக்கிட்டு நோயாக மாற்றும்.

லுகேமியா விரைவாக தனது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், லுகேமியா உடலில் பல ஆண்டுகள் இருந்து பெருமளவில் பரவி விடும். பல ஆண்டுகள் கூட உடலில் பரவி கொண்டிருப்பதை நாம் அறியாமல் இருப்போம்.

லுகேமியாவிலும் பலவகை உள்ளது.

நாள்பட்ட லிம்போசைடிக் லுகேமியா – இது பெரியவர்களை மட்டும் பாதிக்கும்

கடுமையான லிம்போசைடிக் லுகேமியா – இது சிறுவர்களையும், பெரியவர்களையும் பாதிக்கும்

நாள்பட்ட மைலோஜெனஸ் லுகேமியா – இது அதிகமான பெரியவர்களை பாதிக்கும்.

கடுமையான மைலோஜெனஸ் லுகேமியா – இது சிறுவர்களையும், பெரியவர்களையும் பாதிக்கும்.

அறிகுறிகள்

– குளிர் காய்ச்சல்

– பலவீனம் சோர்வு

– அடிக்கடி பல நோய்தொற்று

– திடீர் எடைகுறைவு

– நிணநீர் வீக்கம்

– கல்லீரல், மண்ணீரல் வீக்கம்

– அடிக்கடி மூச்சு திணறல், இரத்த போக்கு

– தோலில் சிறிய புள்ளிகள் உருவாகுதல்

– அதிக வியர்வை, இரவில் வியர்த்தல்

– எலும்புகளில் வலி (அதாவது கை, கால், முதுகு ஆகிய இடங்களில் கடும் வலி)

லிம்போமா (லிம்போமா)

இந்த வகை, நிணநீர் அல்லது எலும்பு மஜ்ஜையில் துவங்கலாம். லிம்போமாவில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.

– ஒன்று ஹாட்ஜ்கின் லிம்போமா. இதை ஹோட்கின்ஸ் நோய் என்றும் அழைப்பர். இந்த வகை பி லிம்போசைட்டுகளில் இருந்து தொடங்குகிறது.

– மற்றொன்று ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா. இது பி அல்லது டி செல்களில் துவங்குகிறது. இதில், பல வகைகள் உள்ளன.

லிம்போமா உடலில் கட்டிகளை உருவாக்கி நோய்யெதிர்ப்பு சக்தியை குறைத்து கடினப்படுத்துகிறது.

அறிகுறி

– கழுத்து, அடிவயிறு, கைகால்களில் வீக்கம்

– நிணநீர் கணுக்கள் விரிவடைதல்

– உணர்வின்மை, கூச்ச உணர்வு

– வயிறு உப்பியிருத்தல் போன்ற உணர்வு

– திடீர் எடை இழப்பு

– இரவில் வியர்த்தல்

– குளிர் காய்ச்சல்

– ஆற்றல் குறைபாடு

– மார்பு மற்றும் முதுகு வலி

– உடல் அரிப்பு

காரணங்கள்

– புகை சார்த்த தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள். அதாவது நெல்கள் பிரிக்கும் ஆலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், எரிபொருள் சார்ந்த வேலைகள் மற்றும் சில துப்புரவு பணிகள் முலம் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் ஏற்படும்.

– அணுகதீர் தாக்கம்

– எச்.ஐ.வி, ஹெபடைடிஸ், சில ரெட்ரோவைரஸ்கள் நோய் தொற்று உள்ளவர்கள்.

– நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, பிளாஸ்மா குறைபாடு

– மரபணு கோளாறு, எலும்பு மஞ்சை புற்றுநோய் உடைய இரத்த சொந்தங்கள் (genetics)

– முந்தைய கீமோதெரபி அல்லது ரேடியேசன் செய்து கொண்டவருக்கு

– புகைப்பிடிப்பவர்

– உடல் பருமன் அதிகம் உடையவர்களுக்கு

கண்டறிதல்

– முழு இரத்த பரிசோதனை, கட்டிகளில் உள்ள திரவங்கள் மூலம் முழு பரிசோதனை செய்து கண்டறியலாம்.

– சிறுநீரில் புரோடின் அளவை பரிசோதித்து கண்டறியலாம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறித்து சோதனை அடிப்படையில் கண்டறியலாம்.

– மருத்துவமனையில் உள்ள எம்.ஆர்.ஐ, சி.டி, பி.இ.டி, எக்ஸ்ரே போன்ற படங்கள் மூலம் கண்டறியலாம்.

– பாயாப்ஸி எனப்படு நிணநீர் பரிசோதனையின் மூலம் அல்லது எலும்பு மஜ்ஜை பரிசோதனை மூலம்

எலும்பு மஜ்ஜை புற்றுநோயின் சிகிச்சை முறைகள்

கீமோதெரபி – என்பது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கும் முறையாகும். இதற்குமேல் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையை பெறுத்து மருத்துவர் பரிந்துரைப்பார்.

டார்கெட் தெரபி – இது பாதிக்கப்பட்ட செல்களை மட்டும் குறிவைத்து தாக்கும். கீமோதெரபி போல் அல்லாமல் பாதிப்பு குறைவான அளவிலேயே இது இருக்கும்.

கதிர்வீச்சு சிகிச்சை – புற்றுநோய் செல்களை கொல்லும், கட்டியின் அளவை குறைத்து வலியை கட்டுக்குள் கொண்டுவரவும் மேற்கொள்ளப்படும்

டிரான்ஸ்பிளான்டேசன் – இது ஆரோக்கியமானவர்களிடம் இருந்து எலும்பு மஜ்ஜை தானம் பெற்று நோய் பாதிக்கபட்டவருக்கு செலுத்தப்படும். இதில், மற்ற சிகிச்சைகளான கிமோதெரபி, டார்கெட்தெரபி, கதிர்வீச்சு முறை ஆகியவையும் மேற்கொள்ளப்படும்.

இந்த நோய் எவ்வளவு கடினமாக இருந்தாலும், முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் குணமடையலாம்.