கொரோனா அபாய வலயத்திலிருந்து நீக்கப்படும் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களை விடுவிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரியாலை தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மத போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 14 பேரை தவிர ஏனையவர்களை நாளை மறுதினம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பவுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய 20 பேர் பலாலியில் தனிமைபடுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய 14 பேர் தனிமைப்படுத் தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தகட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் 23ம் திகதிவரை தனிமைப்படுத்தல் தொடரவுள்ளது.

குறித்த 14 பேர் தவிர்ந்த 332 பேருக்கும் இறுதி பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் எதிர்வரும் 13ம் திகதி அனைரும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவார்கள் என பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 7 நோயாளர்களும் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணம் கொரோனா அபாய வலயத்திலிருந்து நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டின் பின்னர் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.