கொரோனா பரவாமல் இருக்க தங்களுக்குள் கடும் கட்டுபாடு விதித்து கொண்ட இலங்கை தமிழர்கள்!

கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தின் பவானிசாகரில் வாழும் இலங்கை தமிழர்கள், பொதுமக்கள் வெளியாட்கள் நுழையத் தடை விதித்து சாலையின் குறுக்கே முள்வேலி அமைத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில், 3,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், சிலர் ஊரடங்கை மீறி சுற்றுலா செல்வது போல், குடும்பத்தினருடன் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.

இது போன்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், முகாம் பகுதிக்குள் வெளிநபா்கள் நுழைவதால் கொரோனா நோய்த் தொற்று ஏற்படும் என்ற அச்சம் எழுந்ததால் இலங்கை தமிழர்கள், அனைத்து வழித்தடங்களையும் முள்களை வெட்டிப் போட்டு வழிமறித்துள்ளனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநபர்கள் முகாமிற்குள் நுழைய தடை விதித்திருப்பதாக தெரிவித்த மக்கள், தங்கள் முகாமில் இருந்து யாரும் வெளியே செல்லாமல் இருக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

மேலும் முகாமிற்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.