நீர்கொழும்பில் உயிரிழந்த நபருக்கு வைரஸ் தொற்றியது எப்படி?

நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

64 வயதான இந்த நபர் வெளிநாடு சென்று திரும்பியவர் அல்ல எனவும், அவரது குடும்பத்தினரோ உறவினர்களோ அண்மைய காலத்தில் வெளிநாடு சென்று திரும்பியமைக்காக தகவல்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்த நபர் 20 நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்துள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருந்து வெளியில் எங்கும் செல்லவில்லை.

இந்த நிலையில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 16 பேரும் வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபர், தனக்கு ஏற்பட்ட சுவாச கோளாறு காரணமாக நீர்கொழும்பில் உள்ள இரண்டு தனியார் மருத்துவ நிலையங்களில் நெபியூலைய்சர் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்து மருத்துவ நிலையங்களில் கடமையாற்றிய வந்த மருத்துவ ஊழியர்கள் 30 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அந்த நபர் சிகிச்சை பெற சென்றிருந்த நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனையும் தற்போது மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளனர்.