இந்தியாவை எச்சரிக்கும் சர்வதேச விஞ்ஞானிகள்..!!

இந்தியாவில் மே மாதத்துக்குள் 13 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் அதி விரைவாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் தற்போது சுமார் 700 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 16 ஆம் திகதி வரை இந்தியாவில் வைரஸ் பரவலின் வேகம் தொடர்பான தரவுகளை வைத்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இதன் முடிவில், இந்தியாவில் வைரஸ் தொற்றின் வேகம் இதே வேகத்தில் இருந்தால், மே மாத இடைப்பகுதிக்குள் 1 முதல் 13 லட்சம் வரையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது என கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் குறைவு. பரவலான பரிசோதனை குறைவு காரணமாக சமூக பரவலை கணிக்க முடியவில்லை.

அதாவது, இந்தியாவில் மருத்துவமனைகள், சுகாதார மையங்களுக்கு வெளியே எத்தனை பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது என மதிப்பிட முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம் அமெரிக்கா, இத்தாலியை ஒப்பிடும்போது தொடக்க நிலையில் வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக விளங்கியதாகவும்,

ஆனாலும் வைரஸ் பரவல் தீவிரமடைவதற்கு முன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.