10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் இந்தியா படுதோல்வி..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலாவதாக நடந்த டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்தை ‘ஒயிட் வாஷ்’ செய்து பட்டையை கிளப்பியது.

அதை தொடர்ந்து நடந்த ஒரு நாள் தொடரில் இந்தியாவை ‘ஒயிட் வாஷ்’ செய்து நியூசிலாந்து பழிக்கு பழி தீர்த்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21ம் திகதி வெலிங்டன் மைதானத்தில் தொடங்கியது.

நாணய சுழற்சியில வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ஓட்டங்கள் எடுத்தது.

183 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

நிர்ணயிக்கப்பட்ட சுலபமான 9 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நியூசிலாந்து எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு இது முதல் தோல்வியாகும்.

போட்டிக்கு பின் பேசிய இந்திய அணித்தலைவர் கோஹ்லி, இந்த போட்டியில் நாங்கள் போதுமான போட்டித்தன்மையை வெளிப்படுத்தவில்லை.

கடந்த காலங்களில், நாங்கள் தோற்ற போதும் நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம் என்பது எங்களுக்குத் தெரியும்.

முதல் இன்னிங்சில் மிக மோசமான துடுப்பாட்டதை நாங்கள் விளையாடினோம் என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.