ஏழாலை கிழக்கில் அரங்கேறிய பாரிய திருட்டு சம்பவங்கள்…கவலையில் விவசாயிகள்!

ஏழாலை கிழக்கு மற்றும் குப்பிழான் தெற்குப் பகுதிகளில் விவசாய நிலங்களில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து மரக்கறிகள் திருட்டுப் போவதால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழாலை கிழக்கில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வரும் சிவலிங்கம் நகுலேந்திரராசா என்பவரது சுமார்-20 கிலோவுக்கும் மேற்பட்ட பச்சை மிளகாய்கள் கடந்த வியாழக்கிழமை(30) அதிகாலை திருடர்களால் பிடுங்கிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த விவசாயி இம்முறை பச்சை மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டு அதனால் உரிய பயன்களை இதுவரை பெற ஆரம்பிக்காத நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதுடன் மிளகாய்க் கன்றுகளும் முறித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

ஏழாலை ஏழு கோவிலடிப் பகுதிக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 கிலோவுக்கும் மேற்பட்ட கறிமிளகாய்கள் கடந்த வியாழக்கிழமை(30) இரவு திருட்டுப் போயுள்ளது.

குறித்த விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பல கறிமிளகாய்க் கன்றுகள் முறிக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டே இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

தற்போது கறிமிளகாய் அதிக விலையில் செய்யப்படும் நிலையில் மேற்படி திருட்டு நடந்துள்ளமையால் தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.

ஏழாலை கிழக்குப் புளியடி ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வரும் சு. மதியழகன் என்பவரது சுமார்-50 கிலோவுக்கும் மேற்பட்ட கறி மிளகாய்கள் திருடர்களால் பிடுங்கிச் செல்லப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது .

ஏழாலை கிழக்கில் நீண்டகாலமாக விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வரும் மூத்த விவசாயியான கதிரவன் தங்கவடிவேலின் சுமார் பத்துக் கிலோ வரையான கறிமிளகாய்களும் கடந்த சில நாட்களுக்கு முன் திருடப்பட்டுள்ளன.

குறித்த விவசாயி இம்முறை பயிரிடப்பட்ட கறிமிளகாய்களிலிருந்து உரிய பயன்களைப் பெற்றுக் கொள்ள முன் இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

மேலும், குப்பிழான் தெற்கு காடகடம்பை இந்து மயானத்திற்கு அருகில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வரும் நாகலிங்கம் பாஸ்கரன் என்பவரது விவசாய நிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நூறு கிலோ பெறுமதியான பீற்ரூட் திருடர்களால் பிடுங்கிச் செல்லப்பட்டுள்ளன. குப்பிழான் தெற்கின் வேறு சில விவசாய நிலங்களிலும் மரக்கறிகள் களவாடப்பட்டுள்ளன.

விவசாயத்தையே தமது வாழ்வாதாரமாக நம்பியுள்ள நிலையில் மேற்படி களவுகள் நடந்துள்ளமையால் தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்படி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போது மரக்கறிகள் அதிகரித்த விலைகளில் விற்பனை செய்யப்படும் நிலையில் இதனால் தாம் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.