நடிகர் சங்கத் தேர்தல் எப்போது நடந்தாலும் சங்கரதாஸ் அணியே வெற்றி பெறும் என்று மூத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவிப்பு..!!

நடிகர் சங்கத் தேர்தல் எப்போது நடந்தாலும் சங்கரதாஸ் அணியே வெற்றி பெறும் என்று மூத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், பல்வேறு முறைகேடுகள், குழப்பங்களுடன் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது தர்மம், நியாயம், நீதிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். நடிகர் சங்கக் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க, நாடக, நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனிடம் ஆலோசித்து தேர்தலை அணுகுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டங்களுக்கே வராத செயலாளராக இருக்கும் நடிகர் விஷால், மேல்முறையீடுக்கு செல்வது சங்கத்துக்கு செய்யும் துரோகம் என்று ஐசரி கணேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் பாக்யராஜ், நடிகைகள் காயத்ரி ரகுராம், சங்கீதா, நடிகர் நிதின் சத்யா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.. ஐசரி கணேஷூக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாக்யராஜ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தமது சொந்தப் பணத்தில் இருந்து நாடக, நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து செய்வோம் என்றும், இதற்கும் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.